தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (பிப்ரவரி 20) தாக்கல் செய்யப்பட்டு வரும் வேளாண் பட்ஜெட்டில் முதலமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்’ (MKMKS) என்ற புதிய திட்டத்திற்கு ரூ. 206 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 12ஆம் தேதி தொடங்கிய நிலையில் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து, 4வது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை பச்சை துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார்.
முதலில் திருவள்ளுவரின்,
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
என்ற திருக்குறளை கூறி, அதன் விளக்கமாக ‘உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது’ என்று மேற்கோள் காட்டி உரையை தொடங்கினார்.
தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக வேளாண் துறையில் திமுக அரசு செய்துள்ள சாதனைகளை விவரித்தார்.
அதன்படி, ”கடந்த 2 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சாகுபடி பரப்பளவு 155 லட்சம் ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் உள்ளாட்சி கட்டுப்பாட்டில் உள்ள 4,773 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன.
2022-23ஆம் நிதியாண்டில் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
25 லட்சம் விவசாயிகளுக்கு இதுவரை ரூ.4,436 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து 2024-25 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டு வருகிறார்.
நடப்பு நிதியாண்டில் 50,000 பாசன மின் இணைப்புகள் வழங்கப்படும்.
முதலமைச்சரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் என்ற புதிய திட்டத்திற்கு ரூ. 206 கோடி நிதி ஒதுக்கீடு
இயற்கை பேரிடர் ஏற்பட்ட பயிர் சேதத்தை முன்னிட்டு 2.74 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 208.20 கோடி நிவாரணம் விரைவில் வழங்கப்படும்
14 ஆயிரம் ஒருங்கிணைந்த பண்ணை தொகுப்புகள் அமைத்திட 42 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
2 லட்சம் விவசாயிகள் பயனடைய, 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் தயாரிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு
725 உயிர்ம வேளாண் தொகுப்புக்கு ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு
10 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு 2 லட்சம் விவசாயிகளுக்கு 5 லட்சம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் வழங்க 7.5 கோடி நிதி ஒதுக்கீடு
2,482 ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ. 6.27 கோடி நிதி ஒதுக்கீடு
மண்புழு உரம் தயாரிக்க ரூ.6 கோடி மானியம் வழங்கப்படும்
10 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு
ஆடாதொடா, நொச்சி போன்ற தாவர வகைகளை தரிசு நிலங்களிலும் வயல் பரப்புகளிலும் நடவு செய்திட ரூ.1 கோடி வழங்கப்படும்.
அசாடிராக்டின் பயன்பாட்டிற்காக வேம்பினை பரவலாக்கம் செய்யும் வகையில் 10 லட்சம் இலவச வேப்ப மரக் கன்றுகள் வழங்கிட ரூ. 2 கோடி ஒதுக்கீடு
பூச்சிக்கொல்லி தாவர வகைகளை பயிரிட ரூ.1 கோடி ஒதுக்கீடு.
வேளாண் காடுகள் திட்டத்தில் தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய நாற்றங்கால்களை அமைக்க ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு” என்று தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டினை அமைச்சர் வாசித்து வருகிறார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேளாண் பட்ஜெட் : கலைஞர் உருவப்படத்திற்கு அமைச்சர் மரியாதை!
வேலைவாய்ப்பு: விமான நிலைய ஆணையத்தில் பணி!