அக்னிபத் : குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் மனு!

Published On:

| By admin

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் இன்று (ஜூன் 20) மாலை குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி சென்றனர்.

நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பி 6ஆவது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. அதோடு அக்னிபத் திட்டத்தில் வேலையை முடித்துவிட்டு வருபவர்களுக்கு முடி சீர்திருத்தும் பணி, செக்யூரிட்டி பணி வழங்கப்படும் உள்ளிட்ட பாஜக தலைவர்களின் பேச்சு இளைஞர்களிடையே இன்னும் கோபத்தை அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சியினரும் அக்னிபத் திட்டம், அமலாக்கத் துறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

3 நாள் இடைவெளியைத் தொடர்ந்து அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன் அடிப்படையில் இன்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத் துறையில் ஆஜராகியுள்ளார். அமலாக்கத் துறையின் செயலை கண்டித்தும், டெல்லி போலீஸ் எம்.பி.க்களிடம் நடந்து கொண்ட விதத்தை கண்டித்தும், அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் உள்ளிட்டோர் ஜந்தர் மந்தரில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் கூறுகையில், அக்னிபத் திட்டம் தொடர்பாகவும், காவல்துறையினர் காங்கிரஸ் எம்.பி.க்களிடம் நடந்துகொண்ட விதம் குறித்தும், அமலாக்கத் துறையினர் நடவடிக்கை குறித்து குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

அதன்படி இன்று மாலை விஜய்சவுக்கில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் பேரணியாகக் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கிச் சென்றனர். இந்த குழுவில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மூத்த தலைவர்கள் பி.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் ஆகியோர் இடம்பெற்றனர்.

குடியரசுத் தலைவரிடம் அக்னிபத் திட்டம் தொடர்பாகவும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது குறித்தும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், ”ஆயுதப் படைகளின் நலனில் சமரசம் செய்யாமல், அக்னிபத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். இதுதொடர்பாக விரிவான ஆலோசனைகளை நடத்த வேண்டும் மற்றும் செயல்திறன், பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கவும் அரசாங்கத்துக்கு வலியுறுத்த வேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வரும் டெல்லி காவல்துறை, காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு உரிமை விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்த விசாரணை குறிப்பிட்ட கால வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share