டிஜிட்டல் திண்ணை: விடிந்தால் எதிர்ப்பு,… நள்ளிரவில் முடிவு… ஜெட் வேக ஸ்டாலின்- நடந்தது என்ன?

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் இன்று (ஏப்ரல் 3) காலை தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து பங்கேற்ற வீடியோக்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன. against Waqf Bill Stalin Assembly

அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“ஏப்ரல் 2 ஆம் தேதி காலை  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்குப் பின் மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்தார். against Waqf Bill CM Stalin Assembly

இதன் மீதான நீண்ட நெடிய விவாதத்துக்குப் பிறகு அந்த மசோதா ஏப்ரல் 3 ஆம் தேதி முன்னிரவு  1.45 மணியளவில் வாக்கெடுப்பு முடிவுற்று நிறைவேற்றப்பட்டது. 288 வாக்குகள் அரசுக்கு ஆதரவாகவும் 232 ஓட்டுகள் அரசுக்கு எதிராகவும் விழுந்தன. மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாகிவிட்டது.

இந்நிலையில் இந்த மசோதாவின் விவாதங்கள், வாக்கெடுப்பு வரை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று நள்ளிரவானபோதும் விழித்திருந்து பார்த்திருக்கிறார்.

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகியவை கடைசி நேரத்தில் வாக்கெடுப்பில் என்ன  நிலைப்பாடு எடுக்கப் போகிறார்கள் என்று ஸ்டாலின் எதிர்பார்த்திருந்தார். மசோதா நிறைவேற்றப்பட்டது என்பதை அறிந்து உடனடியாக  அந்த நள்ளிரவில் அமைச்சர் எ.வ.வேலுவைத் தொடர்புகொண்டிருக்கிறார் முதல்வர்,

‘பார்லிமென்ட்ல வக்ஃப் சட்டத்தை நிறைவேத்திட்டாங்க. நாளைக்கு சட்டமன்றத்துல இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சாகணும். நாளை நாம எல்லாரும் கருப்பு பேட்ச் அணிந்து சட்டமன்றத்துல பங்கேற்போம். அதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க’ என்று அறிவுறுத்தினார் ஸ்டாலின்.

இதையடுத்து விடிந்ததும் காலை 6 மணிக்கு அமைச்சர் வேலு தனது வீட்டில் ஏற்கனவே பயன்படுத்திய கருப்பு பேட்சுகள் இருக்கிறதா என்று பார்த்தார். திமுக தற்போது ஆளுங்கட்சி என்பதால் அதற்கு அதிக வாய்ப்பில்லை. எனவே தன் வீட்டில் பணியாற்றும் ஊழியர்களிடம் எங்காவது ஃபேன்சி ஸ்டோரை பிடித்து கருப்பு ரிப்பன் வாங்கி வாருங்கள் என சொன்னார்.

அவர்கள் காலை 6.30 மணிக்கெல்லாம் கிளம்பி   7.30க்குள் சில கருப்பு ரிப்பனை கொண்டுவந்துவிட்டனர். against Waqf Bill CM Stalin Assembly

சட்டமன்றம் நடக்கிற நாட்.கள் என்பதால்,  திருவண்ணாமலை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் செங்கம் கிரி, செய்யார் ஜோதி,  கலசப்பாகம்  சரவணன் உள்ளிடோர் காலையிலேயே தங்களுடைய மாவட்ட  அமைச்சர் வேலு வீட்டுக்கு வந்துவிடுவார்கள், அவரோடு சேர்ந்துதான் சட்டமன்றம் செல்வார்கள். இன்று அவர்களை கொஞ்சம் சீக்கிரமே வர சொல்லிவிட்டார் அமைச்சர் வேலு, அவர்கள் காலை 7.30 மணிக்கே வந்து ரிப்பனை கட் செய்து பின்னோடு சேர்த்து ரெடி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் முக்கால் மணி நேரத்துக்குள் திமுக, கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கருப்பு பேட்ச் தயார் செய்துவிட்டனர். 8 மணிக்கு வேலு பொறுப்பு அமைச்சராக இருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்  வசந்தம் கார்த்திகேயன் அமைச்சர் வேலுவின் வீட்டுக்கு வந்தார். அவரும் கருப்பு பேட்ச்சை அங்கேயே வாங்கி அணிந்துகொண்டார். against Waqf Bill Stalin Assembly

அதன் பின் சட்டமன்றத்துக்கு சென்று திமுக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கருப்பு பேட்சுகளை விநியோகித்தனர். against Waqf Bill Stalin Assembly

முதலமைச்சரும் கருப்பு பேட்ச் அணிந்துகொண்டு சட்டமன்றத்துக்கு வந்தார்., சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று (ஏப்ரல் 3) தெரிவித்தார்.

இந்திய நாடாளுமன்றத்தில் பின்னிரவு தொடங்கி அதிகாலை ஒரு முக்கிய சட்டம் நிறைவேற்றப்படுகிறது. அதற்கு இந்தியாவிலேயே முதல் எதிர்ப்புக் குரலை வலிமையாக ஏழு மணி நேரத்துக்குள் ஒரு மாநில சட்டமன்றம் பதிவு செய்திருக்கிறது. இதற்கு முழு காரணமும் முதல்வர் ஸ்டாலின் காட்டிய வேகம்தான் என்று திமுக மட்டுமல்ல, சட்டமன்றத்தில் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களும் கூறியிருக்கிறார்கள்.

‘உங்க  சிஎம் ஸ்டாலின் தூங்குறாரா இல்லையா? இவ்வளவு அப்டேட்டா இருக்கீங்களே…’ என்று  நாடாளுமன்றத்திலும் கருப்பு சட்டையோடு வந்த திமுக எம்.பி.க்களிடம் சில பாஜக எம்.பி.க்களே கேட்டிருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share