நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து பிப்ரவரி 22ஆம் தேதி முதல் வாரத்தில் ஆறு நாள்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. again nagai srilanka boat service
அண்டை நாடான இலங்கைக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் தினம் தோறும் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து, பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால் வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு என்று மூன்று நாட்களாக குறைக்கப்பட்டது.
அதன் பின்னர் சனிக்கிழமை சேர்த்து நான்கு நாள்களாக நீட்டிக்கப்பட்டது. பயணிகளிடையே மெல்ல வரவேற்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி முதல் கூடுதலாக வெள்ளிக் கிழமையும் சேர்த்து இயக்கப்பட்டது. வாரத்தில் ஐந்து நாள்கள் இயக்கப்பட்டு வந்ததால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் நவம்பர் 18ஆம் தேதி முதல் நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் அடிக்கடி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வந்தது. இதனால் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதில் தாமதமானது. வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் ஜனவரி மாதம் முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று கப்பல் போக்குவரத்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் கப்பல் சேவை! again nagai srilanka boat service
ஆனால் கப்பலை இயக்குவதற்கான தொழில்நுட்பச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நிலவி வந்தது. ஒரு வழியாக பிரச்சினைகள் முடிவுக்கு வந்த நிலையில் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று கப்பல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் நாகப்பட்டினம் மற்றும் இலங்கை காங்கேசன்துறைக்கு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் செவ்வாய்க் கிழமை தவிர மீதமுள்ள ஆறு நாள்களிலும் நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.sailsubham.com என்ற இணையதளம் மூலமாக பயணிகள் தங்கள் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். 10 கிலோ எடையுள்ள உடைமைகளை பயணிகள் தங்களுடன் கட்டணமின்றி கொண்டு செல்லலாம். கூடுதலாக உடைமைகளை கொண்டு செல்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.