தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (அக்டோபர் 24) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்து வருகிறது. ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது. இதன்காரணமாக பல்வேறு இடங்களில் அறிவிக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று 2வது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதியைத் தொடர்ந்து தமிழகத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
