சிவங்கை மாவட்டத்துக்கு சட்டக் கல்லூரி, வேளான்மை கல்லூரியை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் நன்றி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில், 2,559 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவிலான 49 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 13 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 28 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 15,453 பயனாளிகளுக்கு 205 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசியதாவது:
2021 மே மாதத்துல தமிழ்நாட்டுல தேர்தல் நடந்து மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலே ஆட்சி அமைந்தது. ஆட்சி அமைந்த பிறகு ஒரு மாதம் கழித்து நானும் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தியும் அவரை தலைமைச் செயலகத்திலே சந்தித்தோம். இரண்டு கடிதங்கள் கொடுத்தேன். இரண்டு கடிதங்கள்லயும் என்ன சொல்லியிருந்தேன்னா, கலைஞர் அவர்கள் சிவகங்கை மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி, தலைமை மருத்துவமனை தந்தார்கள். நீங்கள் உங்கள் ஆட்சியில சட்டக் கல்லூரியும், வேளாண்மைக் கல்லூரியும் தரவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொண்டேன்.
அதற்கு அவர் சொன்ன பதில் என் மனதிலே பசுமையாக இருந்தது. ‘நான் அமைச்சர்கிட்ட பேசுறேன், தலைமைச் செயலாளர்கிட்ட பேசுறேன், துறைச் செயலாளர்கிட்ட பேசுறேன், அமைச்சரவையில பேசுறேன்’னு எல்லாம் சொல்லல. ‘அதற்கென்ன செஞ்சிடலாமே’… அவருக்கு நினைவு இருக்கிறதோ இல்லையோ, எனக்கு நினைவு இருக்கிறது. கவனமாகக் கேளுங்கள், ‘அதற்கென்ன செஞ்சிடலாமே’, ரெண்டு வார்த்தைதான்.
அடுத்து சட்டமன்றக் கூட்டம் நடந்தபோது அமைச்சர்கள் மூலமாக இந்த அறிவிப்பை வெளியிட்டார்கள். இங்கே 101 கோடி ரூபாய்க்கு சட்டக் கல்லூரி, 67 கோடி ரூபாய்க்கு வேளாண்மைக் கல்லூரி வந்திருக்கிறது. ஏறத்தாழ கல்வி மாவட்டமாக நம்முடைய சிவகங்கை மாவட்டம் மாறியிருக்கிறது. கல்வியிலே ஏறத்தாழ இந்த சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியும் சிவகங்கை மாவட்டமும் தன்னிறைவு பெற்ற மாவட்டங்களாகி இருப்பதால் நாடாளுமன்ற உறுப்பினராக பெருமைப்படுகிறேன்.
எனக்கு கனவு காணக்கூடிய இளம் வயது என்பதை முதலமைச்சர் ஒப்புக்கொள்வார். நான் பல கனவுகளைக் காண்கிறேன். இப்ப சொல்லப்போறது இல்ல.
இன்னும் மூன்று மாதம் கழித்து வாய்ப்பு வரும்போது உங்களுக்கு வந்து சொல்வேன். அப்ப அதே வார்த்தை, ‘அதற்கென்ன செஞ்சிடலாமே‘னு நீங்க சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
