சூரத்தை அடுத்து இந்தூர்: காங்கிரஸ் வேட்பாளரை தட்டித் தூக்கிய பாஜக

Published On:

| By Aara

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் மே 13 ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில்… அத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் காந்தி பாம், இன்று (ஏப்ரல் 29) தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். இது தேசிய அளவில் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

லோக்கல் பாஜக எம்எல்ஏ ரமேஷ் மெண்டோலாவுடன், இன்று காலை இந்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றார் பாம். அங்கே தனது வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிட்டு, நேராக பாஜக அலுவலகத்துக்கு சென்றார்.

காங்கிரஸ் வேட்பாளர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்ற தகவலை மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா இன்று தனது எக்ஸ் பக்கத்தில் போட்டோவோடு வெளியிட்டார்.

https://twitter.com/KailashOnline/status/1784833669850403270

“இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் காந்தி பாம் அவர்களை பாஜகவுக்கு வரவேற்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, முதல்வர் மோகன் யாதவ், மாநிலத் தலைவர் வி.டி.சர்மா ஆகியோர் தலைமையை ஏற்று பாஜகவுக்கு வந்திருக்கிறார் அக்‌ஷய் காந்தி பாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தூர் லோக்கல் காங்கிரஸ் தலைவர்களோ,  “இந்தூர்தான் ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரியின் சொந்த ஊர். நாங்கள் ஏற்கனவே  பாம் குறித்து அவருக்கு எச்சரித்திருந்தோம். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை” என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

என்.டி.டி.வி. ஊடகத்திடம் பேசிய இந்தூர் காங்கிரஸ் பிரமுகர் தேவேந்திர சிங் யாதவ், “அக்‌ஷய் காந்தி பாம் பாஜகவோடு தொடர்பில் இருந்து வருகிறார் என்றும், அவரை வேட்பாளாராக நிறுத்தினால் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்றும் ஏற்கனவே நான் மாநில காங்கிரஸ் தலைமைக்கு எச்சரிக்கையாகவே தெரிவித்திருந்தேன். ஆனால் மாநில காங்கிரஸ் தலைமை பல வருடங்களாக கட்சிக்காக உழைப்பவர்களைப் புறக்கணித்துவிட்டு பாம் போன்றவர்களுக்குக்கு சீட் கொடுத்தால் இப்படித்தான்” என்கிறார்.

பாம் மேல் நிலத் தகராறு தொடர்பான கொலை வழக்கு (ஐபிசி 307) இருப்பதை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை. இதைக் குறிப்பிட்டு அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று பாஜகவினர் ஆட்சேபணை எழுப்பினர். இதையடுத்து உடனடியாக மனுவில் அந்த வழக்கு இருப்பதையும் சேர்த்தார் பாம். இதையடுத்து வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் ஏற்றுக் கொண்டார்.

காங்கிரஸ் தரப்பிலோ, “பாம் மேல் இருக்கும் கிரிமினல் வழக்கை வைத்து அவரை பாஜகவினர் மிரட்டி தங்களுடன் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறுகிறார்கள்.

ஏற்கனவே குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் செய்திருந்த மற்றவர்களும் வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதனால் அங்கே பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

‘இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காங்கிரஸ் வேட்பாளரே தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார்.

முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் மாற்று வேட்பாளர் என்ற ஒரு ஏற்பாட்டை செய்திருப்பார்கள். ஆனால்  இந்தூரில்  காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு மாற்று வேட்பாளர்கள் என்ன ஆனார்கள் என்ற கேள்வி எழுகிறது. அதுபற்றி தேர்தல் ஆணைய வட்டாரத்தில் விசாரித்தபோது இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக மனு செய்த  லைலாதர், மோட்டி சிங் ஆகிய இருவரது மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டு பாஜகவுக்கு சென்ற பாம் வீட்டுக்கு எதிரே இந்தூர் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்தூர் தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களையும் போட்டியில் இருந்து விலக வைத்து சூரத் போலவே இங்கேயும் போட்டியின்றி தாமரையை மலரவைக்கும் முயற்சி நடக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

வெயில் தாக்கத்தால் சிறுவன் உயிரிழப்பு!

நிர்மலா தேவி ’குற்றவாளி’ : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share