41 பேர் பலியான துயரத்துக்கு பின் விஜய் இன்று மீண்டும் பிரசாரம்- பரபர கண்டன போஸ்டர்கள்!

Published On:

| By Mathi

கரூரில் 41 பேர் பலியான துயரத்துக்குப் பின்னர் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (டிசம்பர் 18) பிரசாரம் மேற்கொள்கிறார்.

கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி விஜய் மேற்கொண்ட பிரசார நிகழ்ச்சியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து விஜய்யின் ரோடு ஷோ நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அண்மையில் காஞ்சிபுரம் அருகே தனியார் கல்லூரி உள் அரங்கு கூட்டத்தில் அப்பகுதி மக்கள், தவெக தொண்டர்களை விஜய் சந்தித்தார்.

பின்னர் டிசம்பர் 9-ந் தேதி புதுச்சேரியில் பொதுமேடையில் பிரசாரம் செய்தார். இந்நிலையில் இன்று ஈரோட்டில் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார். கரூர் துயரத்துக்குப் பின்னர் தமிழ்நாட்டில் விஜய், பொதுமேடையில் மேற்கொள்ளும் முதல் பிரசாரம் இது.

ADVERTISEMENT

ஈரோடு பெருந்துறை சரளை பகுதியில் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டம் நடைபெறுகிறது. திறந்தவெளியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பவர்கள் ஒவ்வொரு பகுதியாக இரும்பு தடுப்புகளுக்குள் அடைக்கப்படுவர். விஜய்யை நெருங்க முயற்சிப்பதை தடுக்க இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்டவைகளும் செய்யப்பட்டுள்ளன.

விஜய்யின் இன்றைய பிரசாரத்துக்கு 2 மணி நேரம் மட்டுமே போலீசார் அனுமதி கொடுத்துள்ளனர். அதிமுகவின் மூத்த தலைவராக இருந்த கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் தவெகவில் இணைந்தார். தவெகவின் நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர், கொங்கு மண்டல அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் விஜய்யின் இன்றைய பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இந்நிகழ்ச்சிக்கு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

விஜய் பிரசாரம்- சில தகவல்கள்

  • சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் செல்கிறார் விஜய்
  • கோவையில் இருந்து ஈரோடுக்கு காரில் செல்கிறார்
  • ஈரோடு பெருந்துறை சரளை பொதுமேடைக்கு முற்பகல் 11.30 மணிக்கு விஜய் வருகை
  • தவெக மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் உரையாற்றுவர்
  • பகல் 1 மணிக்கு விஜய் உரையாற்றுகிறார்
  • இந்நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
  • விஜய் பிரசார கூட்டம் நடக்கும் இடம் 16 ஏக்கர்
  • வாகன நெரிசலைத் தவிர்க்க பார்க்கிங் ஏரியா மட்டும் 80 ஏக்கர்
  • தொண்டர்களை பகுதி பகுதியாக பிரித்து இரும்பு தடுப்புகளில் அடைத்து வைப்பர்
  • குடிநீர், கழிவறை, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன

விஜய்-க்கு கண்டனம்

இதனிடையே ஈரோடு மாநகரில் பல இடங்களில் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில்,

  • “ஈரோடு வரைக்கும் வந்தீங்களே! கரூருக்கு போகமாட்டீங்களா?”
  • “இங்க இருக்கிற கரூருக்குப் போகல.. ஆனா AUDIO LAUNCH-க்கு மலேசியா போறீங்க? WHAT BRO IT’s Very WRONG BRO”
  • விஜய் பரிதாபங்கள் என்ற தலைப்பில், PRESENT- ABSENT என ஒப்பீடு செய்து விஜய் மலேசியா செல்வது- கரூர் செல்லாதை விமர்சித்தும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share