35 ஆண்டுகளுக்குப் பின் தேனியை சூழ்ந்த முல்லைப் பெரியாறு பெருவெள்ளம்!

Published On:

| By Mathi

Theni Rain

தேனி மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் முல்லைப் பெரியாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. முல்லைப் பெரியாறு ஆற்று வெள்ளம், 300-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டமான தேனியில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் முல்லைப் பெரியாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு ஆற்றின் கரையோரம் உள்ள தேனி பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயா நகரில் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இங்கிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தேனி வீரபாண்டியிலும் முல்லைப் பெரியாறு ஆற்றில் வெள்ளம் இரு கரைகளையும் ஆரத் தழுவியபடி பாய்ந்தோடுகிறது.

ADVERTISEMENT

சுருளி வனப்பகுதியில் கனமழை கொட்டுவதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 2-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு, வைகை ஆறு, கொட்டகுடி ஆறு ஆகிய மூன்றிலுமே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வைகை அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது

ADVERTISEMENT

குன்னூர் பாதிப்பு

நீலகிரி குன்னூரில் கனமழை காரணமாக 10 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால் குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 10,374 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 119 அடியாகவும் நீர் இருப்பு 91.883 டி.எம்.சி.யாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடிக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே வங்கக்கடலில் நாளை மறுதினம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், கடலூரில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share