AFGvsSA Semi-Final: டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் இன்று (ஜூன் 27) காலை 6 மணிக்கு தொடங்கியது.
சுருண்டது ஆப்கானிஸ்தான்!
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய அந்த அணியின் நட்சத்திர வீரர் குர்பாஸ் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
தொடர்ந்து அந்த அணியில் விளையாடிய ஒரு வீரர் கூட 10 ரன்களை தாண்டவில்லை. தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஸத்ரான்(2), குல்புதீன்(9), அஸ்மத்துல்லா(10), நபி(0), கரோட்டி(2), ஜனத்(8), ரஹீத்(8), நூர்(0), நவீன்(2) என அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
இதனால் 11.5 ஓவர்களில் 56 ரன்களில் ஆல் அவுட் ஆனது ஆப்கானிஸ்தான்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் ஜேன்சன், ஷாம்ஷி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரபாடா, நார்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
கேப்டன் மார்க்ரம் அபாரம்!
தொடர்ந்து 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு டி காக்கை க்ளீன் போல்டாக்கி அதிர்ச்சி அளித்தார் ஃபரூக்கி.
எனினும் 2வது விக்கெட்டுக்கு ஹென்ரிக்ஸுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் மார்க்ரம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டிய நிலையில் முதல் 6 ஓவரில் 33 ரன்கள் குவித்தனர்.
தொடர்ந்து இருவரும் சிறப்பாக ஆடிய நிலையில், தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களில் 60 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஐசிசி உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்கா அணி முன்னேறி சாதனை படைத்துள்ளது.
போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் மார்க்ரம் (23) மற்றும் ஹென்ரிக்ஸ் (29) களத்தில் இருந்தனர். 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜேன்சன் ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.
ரிவ்யூ எடுக்க தவறிய ரஷீத் கான்
முன்னதாக 3வது ஓவரில் மார்க்ர்ம் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் குர்பாஸ் கேட்ச் பிடித்த நிலையில் அம்பயர் விக்கெட் கொடுக்கவில்லை. அதில் கீப்பர் குர்பாஸிடம் இருந்து தெளிவான பதில் கிடைக்காத நிலையில் ரிவ்யூ எடுக்க கேப்டன் ரஷீத்கான் தவறினார்.
அப்போது ரிவ்யூ கேட்டிருந்தால் மார்க்ரம் டக் அவுட் ஆகியிருக்க கூடும். இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு நெருக்கடி ஏற்பட்டு போட்டியின் முடிவிலும் ஒருவேளை மாற்றம் ஏற்பட்டிருக்க கூடும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஹப்பர் பெர்த் அறுந்து விழுந்து பயணி மரணம்!
பியூட்டி டிப்ஸ்: சருமத்தை மெருகூட்ட… தினமும் இதைச் செய்தாலே போதும்!