ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 800ஐ கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஜலாலாபாத் நகரை மையமாக கொண்டு 8 கி.மீ ஆழத்தில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. மீண்டும் 20 நிமிடம் கழித்து அதே பகுதியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் குனார் மாகாணத்தில் உள்ள 3 கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 800க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் 2500 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் பேரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஆழ்ந்த வருத்தத்திற்குரிய விஷயம். அந்நாட்டு மக்களுக்கு எங்களுடைய ஆதரவை தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
