ICC WorldCup 2023: உலகக் கோப்பை லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.
இந்த வெற்றியை சமீபத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அந்த அணி வீரர்கள் கூறியது கிரிக்கெட் அரங்கில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் நேற்று(அக்டோபர் 15) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 13 ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மோதின.
இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களுக்கு 284 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்கவீரர் குர்பாஸ் 80 ரன்களையும், இக்ரம் 58 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு முதல் 10 ஓவரில் தொடக்க வீரர் பேர்ஸ்டோவ் மற்றும் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது ஆப்கானிஸ்தான்.
தொடர்ந்து இங்கிலாந்தின் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
எனினும் ஹாரி ப்ரூக் மட்டும் 66 ரன்கள் குவித்து சிறிது ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் யாரும் அவருக்கு துணையாக நிற்காத நிலையில், இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் 14 ஆட்டங்களுக்கு பிறகு தனது முதல் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.
முன்னதாக கடந்த 2015 உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களான முஜீப் உர் ரஹ்மான்(3), ரஷித் கான்(3) மற்றும் நபி (2) ஆகியோர் மட்டுமே 25.3 ஓவர்கள் வீசிய நிலையில் மொத்தமாக இங்கிலாந்தின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் 9வது இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேவேளையில் நடப்பு உலகக்கோப்பையில் இன்னும் ஒரு வெற்றியைக்கூட பெறாத 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா 10ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதுவரை நடந்த 12 லீக் போட்டிகளிலும் பலம் வாய்ந்த அணிகள் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், முதன்முறையாக தொடர் தோல்விகளுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானின் இந்த வெற்றி… நடப்பு உலகக்கோப்பை தொடரில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் போட்டிக்கு பின்னர் பேட்டியளித்த ஆட்ட நாயகன் முஜீப் உர் ரஹ்மான் மற்றும் ரஷீத் இருவரும் இந்த வெற்றியை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தனர்.
இதுகுறித்து ரஷீத் கான் கூறுகையில், “இது எங்களுக்கு ஒரு பெரிய வெற்றி. இந்த வகையான செயல்திறன் எந்த நாளிலும் நாங்கள் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. இந்த உலகக் கோப்பையின் எஞ்சிய காலத்திற்கான ஆற்றலை இது எங்களுக்கு வழங்கும்.
கிரிக்கெட் என்பது எங்கள் ஆப்கன் மக்களுக்கு சிறிது மகிழ்ச்சியை தர கூடியது. சமீபத்தில், எங்கள் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 3,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். எனவே இந்த வெற்றி அவர்களின் முகத்தில் கொஞ்சம் புன்னகையை தரும். அவர்களுக்கே இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம்” என்று ரஷீத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’ஏங்க… அவங்க நம்ம பங்காளிங்க’ : அப்டேட் குமாரு
10 ஆவது நாள் போர்… தொடரும் சர்வதேச அரசியல்- துயரில் காசா மக்கள்!
ராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேர் கைது: வேலை நிறுத்தம் – சாலை மறியல்!
