India vs Afghanistan : ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (அக்டோபர் 11) மதியம் தொடங்கிய 9வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் வந்த வேகத்தில் 4 பவுண்டரிகள் விளாசி 22 ரன்கள் அடித்த தொடக்க வீரர் இப்ராகிம் ஜாட்ரான் பும்ரா வேகத்தில் வெளியேறினார்.
அவரைத்தொடர்ந்து இன்று பிறந்தநாள் காணும் ஹர்திக் பாண்டியா வீசிய 13வது ஓவரில் சிக்ஸருக்கு தூக்கிய குர்பாஸை பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்த சர்ந்துல் தாக்கூர் அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தலாக அவுட் செய்தார்.
https://twitter.com/GovindV41685093/status/1712047740505743718
அதற்கு அடுத்த ஓவரிலேயே ரஹ்மத் ஷா 16 ரன்களில் பெவிலியன் திரும்ப 63 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது ஆப்கானிஸ்தான்.
எனினும் 4வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி மற்றும் ஓமர்சாயும் நங்கூரமாய் நின்று பொறுப்புடன் விளையாடினர்.
இருவரும் அரைசதம் கடந்த நிலையில், உறுதியாக நின்று விளையாடிய இந்த ஜோடியை ஓமர்சாயை(62) கிளின்போல்டு செய்து பிரித்தார் ஹர்திக் பாண்டியா.
4வது விக்கெட்டுக்கு இருவரும் 121 ரன்கள் குவித்த நிலையில், உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த முதல் ஆப்கானிஸ்தான் ஜோடி என்ற பெருமையை பெற்றது.
எனினும் தொடர்ந்து கேப்டன் இன்னிங்ஸை தொடர்ந்த ஷாகிதி 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய முகமது நபி(19), நஜிபுல்லா(2) மற்றும் ரஷித் கானை(10) அடுத்தடுத்து வெளியேற்றினார் இந்தியாவின் புயல் பும்ரா.
இதனால் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 272 ரன்கள் குவித்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி. இது உலகக்கோப்பை போட்டிகளில் ஆப்கானிஸ்தான் குவித்த 2வது அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டும், குல்தீப் மற்றும் ஷர்துல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அதேவேளையில் விக்கெட் எடுக்காமல் ஓவருக்கு 8.44 ரன்கள் வீதம் 76 ரன்களை வாரி வழங்கியுள்ளார் முகமது சிராஜ்.
தொடர்ந்து 273 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ரூ.60 கோடி சொத்துகுவித்த அனிதா ராதாகிருஷ்ணன்: அமலாக்கத்துறை வாதம்!