தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24.06.2022) சென்னை, தரமணி, டைடல் பூங்காவில் நடைபெற்ற தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மாநாட்டில் கலந்து கொண்டார். அவரோடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மேம்பட்ட உற்பத்தி மையம் (Advanced manufacturing Hub-AMHUB) தொடர்பான மாநாடாக இது ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சிக்கு (Industry 4.0) நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. அந்த இலக்கை நிச்சயமாக நாம் எட்டுவோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “295 பில்லியன் அமெரிக்க டாலர் உள்நாட்டு உற்பத்தி என்ற வகையில், அகில இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. உற்பத்தியில், அகில இந்திய அளவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே தலைசிறந்த இடத்தைத் தமிழ்நாடு பெற்றிருக்கிறது.
இவற்றோடு நாம் மனநிறைவு அடைந்துவிடாமல் 2030ஆம் ஆண்டில், தமிழகத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும். அந்த இலக்கை அடைவதற்கான பாதைகளை அடையாளம் கண்டு, அப்பாதையில் அரசு வெற்றிகரமாகப் பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இருக்கின்ற திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி, ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன், உலகளாவிய பங்களிப்புடன் “அறிவுசார் நகரம்”(Knowledge City) ஒன்று உருவாக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT), தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (TANSIDCO) போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் தங்களின் வளாகங்களில் ஆராய்ச்சிப் பூங்காக்களை (Research Parks) நிறுவ ஊக்குவிக்கப்படும்” என்று அரசு அறிவித்திருந்தது.
அதன்படியே, அறிவுசார் ஆராய்ச்சிப் பூங்கா ஒன்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் என்று அண்மையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற தொழில் முனைவோருடனான சந்திப்பில் அறிவித்தேன். இவையெல்லாம், அறிவுசார் மனித வளத்தை உருவாக்கி, மேம்பட்ட உற்பத்தி மற்றும் புத்தாக்கங்களை உருவாக்கி, ஊக்குவிக்கத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் சிறப்பு நடவடிக்கைகள்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “திறன்மிகு மையங்களை அமைக்கக்கூடிய முயற்சியில், முதலாவதாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான டசால்ட் சிஸ்டம்ஸ் உடன் இணைந்து, சென்னை டைடல் பார்க்கில் 212 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம் (TANCAM) இங்குத் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
சென்னையை மையமாகக் கொண்டு, மைய மற்றும் துணை மைய மாதிரி (Hub and Spoke model) அடிப்படையில் இயங்கும் TANCAM, மாநிலமெங்கும் இருக்கின்ற கல்வி நிறுவனங்களுடனும், தொழில் நிறுவனங்களுடனும் இணைந்து துணை மையங்களை நிறுவி, பரவலாக்கப்பட்ட திறன் பயிற்சி, புதிய பொருட்கள் உருவாக்குதல் , நவீன உத்திகள் ஆகியவை பெருக வழிவகுக்கும்.
மாணவர்களுக்கும், தொழில் முனைவோருக்கும், அவர்களின் படிப்புக்கும், பணிக்கும், இடையூறு எதுவுமில்லாமல், மெய்நிகர் சூழல் வழியாக பயிற்சி அளிக்கப்படும்.
புதிய பொருட்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கும், சிறந்த பயிற்சிகளுக்கும், சூழலமைப்பு அமைத்துக் கொடுக்கப்படும்.
தொழில்துறையினருக்கு ஒரு சாதகமான களம் உருவாக்கித் தரப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையினரின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நவீன உத்திகளுக்கும், புதுப்புது திட்டப்பணிகளுக்கும் வழிவகை செய்து தரப்படும். இதன்மூலம், தமிழ்நாடு இந்தியாவின் மிகவும் மேம்பட்ட தொழில் மாநிலமாக வளர்ச்சி அடைவது உறுதி செய்யப்படும்.
டிட்கோ நிறுவனம், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ‘சீமென்ஸ்’ உடன் இணைந்து, தமிழ்நாடு மின்னணு மயமாக்கப்பட்ட & மேம்பட்ட உற்பத்தி மையம் (TANSAM) மற்றும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான ஜி.இ.ஏவியேஷன் உடன் இணைந்து, தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் (TAMCOE) அமைக்கும் பணி முடிக்கப்பட்டு, விரைவில் துவக்கிவைக்கப்பட இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இரண்டாவதாக, திருபெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காக்களில் 33.46 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 தொழில் புத்தாக்க மையங்கள், (Industrial Innovation Centres) இன்று துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மையங்கள், தொழில்துறை புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொடக்கநிலை தொழில்முனைவோர் விரைவில் வளர்ந்திடவும், தமிழ்நாட்டில் உயர் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், உற்பத்தித் துறையின் உற்பத்தி மற்றும் போட்டித் தன்மையை மேலும் வலுப்படுத்துவதற்கும், திறன் கொண்ட உலகத்தரம் வாய்ந்த மையங்களாக விளங்கும். ஒவ்வொரு மையமும் 23,500 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இவற்றின் மூலம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதுமையான யோசனைகள், 200-க்கும் மேற்பட்ட முன்மாதிரிகளை மதிப்பீடு செய்யவும், 30-க்கும் மேற்பட்ட தொடக்கக் காலப் பட்டப்படிப்பு நிலையில் உள்ளவர்களைத் தொழில்முனைவோர்களாக உருவாக்கிடவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த மையங்களை இயக்குவதற்காக ஃபோர்ஜ் (Forge) எனப்படும் கோயம்புத்தூர் இன்னோவேஷன் மற்றும் பிசினஸ் இன்குபேட்டருடன் (Coimbatore Innovation and Business Incubator) சிப்காட் இணைந்து செயல்பட இருக்கிறது.
மூன்றாவதாக, தமிழ்நாட்டிலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களிலும் “மினி டைடல் பூங்காக்கள்” (Neo Tidel Parks) அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தேன். அதனடிப்படையில் திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பூங்காக்கள் செயல்படத் துவங்கும்போது, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அவர்களது மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
நான்காவதாக, வழிகாட்டி நிறுவனமும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்ளக்கூடிய நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி முதிர்வு கணக்கெடுப்பு (Industry 4.0 Maturity Survey) இன்றைய நாள் துவக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
தொழில்துறை மட்டுமின்றி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற துறைகளும், மேம்பட்ட உற்பத்தித் தொழில்களை மாநிலத்திற்குக் கொண்டு வருவதற்கான கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொழில்நுட்ப மையங்களாகத் தரம் உயர்த்தி வருகின்றது. 2877 கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் இவை அமைக்கப்பட இருக்கிறது. இதன்மூலம், நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சியினால் ஏற்படவுள்ள தொடர் மாற்றங்களை, நமது தொழிலாளர்கள் சுலபமாகக் கையாள முடியும்” என்றார்.
**-பிரியா**
