தமிழகம் முழுதும் விவசாயிகளுக்கு தமிழக வேளாண் துறை சார்பில் மானிய விதையில் உளுந்து உள்ளிட்ட பயிர் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ் நெல், உளுந்து மற்றும் சிறுதானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் சாகுபடி பரப்பு இலக்கு வழங்கப்பட்டு, அதற்கேற்ற உற்பத்தி இலக்கும் வழங்கப்படுகிறது.
இந்த இலக்கை எட்டும் வகையில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வழங்கப்படுகின்றன.
இந்த வகையில் தற்போது வழங்கப்பட்டு வரும் உளுந்து விதைகள் தரமற்றவையாக உள்ளன என்று தமிழ்நாடு அரசின் வேளாண் துறை செயலாளர் அபூர்வாவுக்கும், இந்தத் திட்டத்துக்கு நிதி உதவி செய்யும் மத்திய அரசு அதிகாரிகளுக்கும் புகார்கள் சென்றிருக்கின்றன.
இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளரான பின்னல்வாடி கிராமத்தைச் சேர்ந்த ஜெ.அன்புமணி நம்மிடம் பேசினார். “அக்டோபர் முதல், இரண்டாம் வாரங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நான் உட்பட பல விவசாயிகள் பரவலாக விதை உளுந்து வாங்கினோம். வம்பன் -8 என்ற வகை உளுந்து விதைகள் 40 கிலோ பை 4 ஆயிரம் ரூபாய்க்கு வேளாண் விரிவாக்க மையங்களில் வழங்கப்பட்டது.
அதை வாங்கிச் சென்று விதைப்பதற்காக பிரித்த போது விதை உளுந்தானது முற்றிலும் தரமற்று காணப்பட்டது. உளுந்து குறியீட்டு அளவை விட மிகவும் சிறியதாக இருந்தது. அதனால் மேற்படி விதை உளுந்தினை 6-ம் எண் சல்லடை மூலம் சலித்த போது சுமார் 450 கிராம் அளவிற்கு மிகமிக சிறிய அளவிலான கப்பி உளுந்து கீழே சலிக்கப்பட்டது. மீதமுள்ள 550 கிராம் உளுந்தும் விதைப்பதற்கு தரமற்று இருந்தது.
இதுபோல் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நடந்திருக்கிறது. அனைவருக்குமே விதை உளுந்து தரமானதாக இல்லை. இதுகுறித்து வேளாண் அதிகாரிகளிடம் முறையிட்டபோது, ‘எங்களுக்கு வருகிற விதை பேக்கேஜ்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். அதில் தரமற்று இருந்தால் நாங்கள் பொறுப்பல்ல… நிறைய பேர் புகார் சொல்லுவதால் நாங்களும் மேலிடத்தில் சொல்கிறோம்’ என்று பதிலளித்தனர்.
எங்கள் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுதும் இப்படித்தான் இருக்கிறது என்று எங்கள் சங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சொல்கிறார்கள். 20 கிலோ உளுந்து விதைப் பையில் சுமார் 5 முதல் 6 கிலோ இப்படித்தான் இருக்கிறது. இதேபோல 5 டன் உளுந்து விதை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அப்படியென்றால் எவ்வளவு என கணக்கு போட்டுக் கொள்ளுங்கள்… அதிகாரிகள் இதை எங்கிருந்து கொள்முதல் செய்கிறார்கள். இதற்கு சான்றிதழ் கொடுத்த அதிகாரி யார்?
மேற்கண்ட விதை உளுந்து வாங்கி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தாவர வகைகள் மற்றும் விவசாயிகளின் உரிமை பாதுகாப்பு சட்டம் 2001 பிரிவு 39 (2)ன் படி தக்க இழப்பீடு வழங்கப்பட வேண்டும். கலப்பட உளுந்தினை திரும்பப் பெற்று நல்ல உளுந்து விதைகளை வழங்க வேண்டும்.
தேசிய அளவில் உணவு உற்பத்தியை பெருக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுவரும் மத்திய அரசின் NFSM (National Food Safety Mission) திட்டத்தின் மூலம்தான் இந்த விதைகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தின் 75 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். விவசாயமே பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது.
எனவே பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உரிய பரிகாரம் கிடைக்கவும், பணியில் அலட்சியமாகவும், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். விவசாய துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், விவசாய துறை செயலாளர் அபூர்வா ஆகியோர் வேகமாக செயல்பட்டு இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும். உடனடி நடவடிக்கை இல்லையென்றால் இதுகுறித்து உயர் நீதிமன்றத்தை அணுகவும் தயாராகி வருகிறேன்” என்று கூறினார் ஜெ.அன்புமணி.
விவசாயிகளின் விதையில் கலப்படம் செய்வது என்பது தாய்ப்பாலில் கலப்படம் செய்வது மாதிரி கொடுமையானது. எனவே அரசு உடனடியாக இந்த கலப்பட விதைகள் குறித்து விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும்!
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆசிரியர் பணி நியமனங்களை நிறுத்தி வைத்திருப்பது ஏன்? – அன்புமணி கேள்வி!