ஆர்டிஓ அலுவலகத்தில் கரைபுரண்டோடும் லஞ்சம்: ஏடிஎஸ்பி எச்சரிக்கை!

Published On:

| By Kavi

கடலூர் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு (விஜிலன்ஸ்) கூடுதல் காவல் கண்காணிப்பாளராக தேவநாதன் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் மே 31ஆம் தேதி கடலூர் ஆர்டிஒ அலுவலகத்தில் இவரது தலைமையிலான குழு சோதனை செய்து, ஆர்.டி.ஓ சுதாகரை கைது செய்தது.

அந்த இடத்துக்கு பொறுப்பு ஆர்டிஓ-வாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆர்டிஓ முக்கண்ணன் நியமிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

கோயிலில் பிச்சை எடுப்பவர்கள் எவ்வளவோ மேல்

இந்நிலையில் ஜூன் 9ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் கடலூர் ஆர்டிஒ அலுவலகத்தில், பன்ருட்டி, நெய்வேலி யூனிட் அலுவலக பிரேக் இன்ஸ்பெக்டர்கள் விஜய், சோமசுந்தரம், பிரான்சிஸ், மற்றும் அலுவலக அதிகாரிகள், டூ வீலர், கார், லாரி, பஸ் ஷோரூம் டீலர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் உரிமையாளர்கள், ஆர்டிஒ அலுவலக புரோக்கர்கள் அனைவரையும் அழைத்து ஒரு கூட்டத்தை கூட்டினார் ஆர்டிஒ முக்கண்ணன். இந்த கூட்டத்துக்கு விஜிலன்ஸ் ஏடிஎஸ்பி தேவநாதன் மற்றும் இன்ஸ்பெக்டர்களும் வருகைத் தந்தனர்.

ADVERTISEMENT
ADSP warning rto officers brokers

இந்த கூட்டத்தில் ஏடிஎஸ்பி தேவநாதன் மைக் பிடித்து பேச ஆரம்பித்தார். ஆரம்பத்திலேயே அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக கடிந்துகொண்டு பேசிய ஏடிஎஸ்பி, “லஞ்சம் என்ற பெயரில் இப்படி பிச்சை எடுக்கிறீர்கள். இதற்கு கோயிலிலும் பேருந்து நிலையங்களிலும் பிச்சை எடுக்கிறவர்கள் எவ்வளவோ மேல். இதற்கு மேலும் உங்களோடு எமோஷனலாக பேசினால் வேறு மாதிரியாக இருக்கும்.

இந்த அலுவலகத்தில் சிலர் பேப்பர் கொடுத்தால் உடனே ஃபைல் மூவாகிறது. சிலர் கொடுத்தால் அப்படியே போட்டுவிடுகிறீர்கள். யார் யார் ஃபைல் மூவ் ஆனது என நான் சொல்லட்டுமா? இந்த ஒரு வாரத்தில் ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளரான புருஷோத்தமன் போன்றவர்கள் ஃபைல் மட்டும் கிளீயர் ஆகியிருக்கு” என்று ஒரு லிஸ்ட்டை பட்டியலிட்டார்.

ADVERTISEMENT

யாருக்காக லஞ்சம் வாங்குறீங்க?

மேலும் அவர், “ஒவ்வொரு விஷயத்தையும் நாங்கள் இன்ச் பை இன்ச்சாக கண்காணிப்போம். ஆர்டிஓ சொல்வது போல ஷோ ரூமில் கூடுதலாக பணம் வாங்க கூடாது.

உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று வெளிப்படையாக பேசுங்கள், என் நோக்கம் இந்த அலுவலகத்தில் இனி லஞ்சம் வாங்குவதெல்லாம் இருக்கக் கூடாது.

ஆர்டிஒ 12.00 மணிக்குதான் வருகிறார். ஆனால் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் பாண்டியன் ஆர்டிஒ அறையில் சேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறார், அவருக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது” என்று கேள்வி எழுப்பினார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே இடையில் ஆர்டிஒ முக்கண்ணன் எழுந்து இந்த அலுவலகத்தில் நான் லஞ்சம் வாங்கமாட்டேன் என்று ஏடிஎஸ்பி தேவனாதனிடம் சொல்ல, உடனே அவர், ஆர்டிஒ லஞ்சம் வாங்க மாட்டேன் என்று சொல்கிறார், ஆர்டிஒ இன்ஸ்பெக்டர்கள் லஞ்சம் வாங்கமாட்டேன் என்கிறார்கள்.

அப்படியென்றால் யாருக்காக லஞ்சம் வாங்குறீங்க, யாருக்கு காசு கொடுப்பிங்க, ஏன் பத்து நாள் பணம் ஸ்டாக் வெச்சிருக்கீங்க, யாருக்கு கொடுக்க வெச்சியிருக்கீங்க” என ஆவேசமாக கேள்விகளை எழுப்பினார்.

ஏடிஎஸ்பி தேவநாதனின் இந்த பேச்சும் நடவடிக்கையும் அதிகாரிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

திமுக ஆட்சியில் மாதம் ரூ.3 கோடி கொடுக்கிறோம்.

இதுகுறித்து ஆர்டிஒ அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம்… “ஏடிஎஸ்பி முயற்சிகள் சிறப்பாக உள்ளது. அதே வேலையில் அவர் கொஞ்சம் திரும்பி பார்க்கவேண்டும். அதிமுக ஆட்சியில் மாதம் மாமூல் 40 லட்சம் கொடுத்து வந்தோம். இந்த திமுக ஆட்சி வந்த பிறகு மாதம் ரூ.3 கோடி கொடுத்து வருகிறோம். ஒரு ஆர்டிஒ அலுவலகத்துக்கு ரூ.2.லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையில் கொடுத்து வருகிறோம்.

டிடிசிக்கு (துணை போக்குவரத்து ஆணையர்) மாதம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் கொடுக்க வேண்டும். மாமூல் கொடுக்கவில்லை என்றால் எங்களை காத்திருப்போர் பட்டியலில் போட்டுவிடுவார்கள். அல்லது செயலாக்க பிரிவுக்கு மாற்றுவார்கள்.

ஆட்சியாளர்கள் லஞ்சம் வாங்குவதை நிறுத்தும் வரையில், அதிகாரிகள் வாங்கி கொண்டுதான் இருப்பார்கள். இதை யாராலும் தடுக்க முடியாது. போலீஸ் அதிகாரிகள் முதல்வரிடம் சொல்லட்டும். ஆர்டிஒ ஆபிஸ்களில் மாதம் மாமூல் வாங்கவேண்டாம் என்று உத்தரவு போடசொல்லுங்கள்.

இடம் மாற்றத்துக்கு 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை வசூலிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். நாங்கள் ஒரு பைசா லஞ்சம் வாங்கமாட்டோம். அப்படி வாங்கினால் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்க தயார்” என ஆவேசமாக கூறினார்கள்.

மேலும் அவர்கள், “இங்கே நடந்த மீட்டிங் போல், காவல் நிலையத்திலும், எஸ்பி அலுவலகத்திலும், தாலுக்கா அலுவலகத்திலும், பிடிஒ அலுவலகத்திலும் நடத்த சொல்லுங்கள் வரவேற்கிறேன். லஞ்சம் இல்லாத துறை எது? இந்த கூட்டத்தில் ஏடிஎஸ்பி பக்கத்தில் அமர்ந்திருந்த முக்கண்ணன் அதிகளவு லஞ்சம் வாங்கியிருக்கிறார். அதுதொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

லஞ்சம் வாங்கத் தூண்டுவது யார்?

தற்போது கடலூர் ஆர்டிஒ அலுவலகம், பண்ருட்டி, நெய்வேலி யூனிட் அலுவலகங்களில் எந்த வேலையும் நடப்பது இல்லை. வாகன உரிமம் எடுப்பதற்கான டெஸ்ட் குறைந்திருக்கிறது. லைசன்ஸ் எடுக்க எட்டு போடும்போது பலரும் பெயில் ஆகிறார்கள். டெஸ்ட் வாகனத்தில் இரண்டு பிரேக் இருக்கும். இடது பக்கம் இன்ஸ்பெக்டர் உட்கார்ந்து கொண்டு பிரேக்கில் கால் வைத்துக்கொண்டு வண்டியை எடு என்பார். வாகனத்தை எடுப்பவர் ஆக்சிலெட்டர் கொடுத்தால் கார் ரேசாகும் நகராது. உடனே ஃபெயில் போட்டுவிடுவார்.

அதேபோல் லாரி பேருந்து பேப்பர்கள் எல்லாம் பெண்டிங்கில் இருக்கிறது. காரணம் நிரந்தரமான ஆர்டிஒ இல்லை. கிரேடு 2 இன்ஸ்பெக்டர்கள் இரண்டு பேர் இல்லை. கிரேடு 1 இன்ஸ்பெக்டர்கள் இரண்டு பேர் இல்லை. ஆர்டிஒ பிஏ இல்லை. அவர்தான் நிர்வாக பணிகளை பார்ப்பவர். இதுபோன்று அதிகமான காலி பணியிடங்கள் இருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்கள்.

விஜிலென்ஸ் அலுவலகத்தில் விசாரித்தபோது, “தேவநாதன் சார் மிகவும் நேர்மையானவர், அவர் இருக்கும் இடத்தில் யாரும் லஞ்சம் வாங்கக்கூடாது என்று நினைப்பவர், காவல்துறையினறையும் விட்டு வைக்கமாட்டார். அந்த அளவுக்கு நேர்மையானவர்” என்கிறார்கள்.

ஏடிஎஸ்பி தேவநாதனின் இந்த நடவடிக்கை அதிகாரிகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வணங்காமுடி

சென்னை அருகே விரைவு ரயிலில் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!

அனிதா சொத்துக் குவிப்பு வழக்கு: அமலாக்கத்துறை மனு என்னாச்சு? அமைச்சர்கள் வெயிட்டிங்…

”உங்கள் வரவேற்பு 140 கோடி இந்தியர்களுக்கும் கவுரவமாகும்”-அமெரிக்காவில் மோடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share