இரட்டை இலை: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பதில்!

Published On:

| By Kavi

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இரட்டை இலை விவகாரம் தொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், “இரட்டை இலை சின்னம் தொடர்பாக பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும்” என்று கடந்த டிசம்பர் 4ஆம் தேதி உத்தரவிடப்பட்டது.

இன்னும் 3 தினங்களில் இந்த காலக்கெடு முடிவடைய இருக்கும் நிலையில், வா.புகழேந்தி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சூர்யமூர்த்தி ஆகியோர் சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் அளித்த மனுவில், ”எடப்பாடி பழனிசாமி மட்டுமே பொதுச்செயலாளராக போட்டியிடும் வகையில் அதிமுக விதிமுறையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2022 ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறினாலும் சிவில் வழக்கு தொடரலாம் என்றும் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் தீர்வு காணும் வரை ஜூலை 11ல் திருத்த விதிகளுக்கு அங்கீகாரம் வழங்கக்கூடாது” என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு அளித்தார்.

அதில், “அதிமுகவுக்கும் ராம்குமார் ஆதித்தனுக்கும் எந்த சம்பந்தம் இல்லை. கட்சியின் உள் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. பொதுக்குழுவை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் தீர்மானங்களை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று (ஜனவரி 1) முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் “ஒருமுறை முதன்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் கட்சி தலைமை, 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும்.

இதை பொதுக்குழுவின் தீர்மானம் மூலம் கலைத்துவிட முடியாது. தற்போது சட்ட விரோதமாக கட்சி நிர்வாகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது அவர்களால் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த முடியாது. எனவே எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ரூ.390 சேலை 1600க்கு விற்று மோசடி : திவ்யா உண்ணி நிகழ்ச்சியால் கல்யாண் சில்க்ஸ் அலறல்!

மெல்பர்னில் டிராவிஸ் ஹெட் செய்தது என்ன? சித்து காட்டமான பின்னணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share