உள்ளாட்சித் தேர்தல்: பணிகளைத் தொடங்கிய அதிமுக!

Published On:

| By Balaji

உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனுக்கள் தொடர்பாக அதிமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. வரும் டிசம்பர் மாதம் கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோலவே நாங்குநேரி பொதுக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், இன்னும் 15 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

உள்ளாட்சித் தேர்தலில் இடங்கள் பங்கீடு தொடர்பாக அதிமுகவுக்குக் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே கடந்த 6ஆம் தேதி நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு உள்ளாட்சித் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது அதிமுக.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று (நவம்பர் 10) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட அனுமதி கோரும் கழக உடன்பிறப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

15.11.2019 (வெள்ளிக்கிழமை) மற்றும் 16.11.2019 (சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில், கழக அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் தலைநகரங்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பதவிக்கும் விருப்ப மனுவுக்கான கட்டணத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share