இடைத்தேர்தலில் தங்களது தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற செய்த நிலையில், ’நம்முடைய அண்ணன் ஓபிஎஸ்-க்கு நன்றி’ என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மற்ற கட்சிகளை விட இரு அணிகளாக பிரிந்துள்ள அதிமுக வுக்கு மிகப்பெரும் சோதனை களமாகவே அமைந்துள்ளது.
இடைத் தேர்தல் அறிவித்த நாள்முதல் இபிஎஸ், ஓபிஎஸ் என அணிகளின் தரப்பிலிருந்தும் வெளிவந்த அறிவிப்புகள் குழப்பத்தையே ஏற்படுத்தின.
ஒரு கட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளராக தென்னரசும், ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளராக செந்தில் முருகனும் அறிவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே தேர்தல் ஆணையத்தின் குறுக்கீட்டால், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்ற அபாயம் ஏற்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, கருத்துகேட்டு வேட்பாளரை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு தேர்வு செய்யப்பட்டதாக பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதங்களை இன்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.

மேலும் இரட்டை இலை சின்னம் பெற தடையாக இருக்க கூடாது என்பதற்காக ஓபிஎஸ் அணியின் சார்பில் தங்களது வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுபவர்களுக்கே ஆதரவு என்றும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு கேட்டு அதிமுக வின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மதியம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓபிஎஸ் க்கு இடைத்தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நன்றி தெரிவித்தார்.
அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்த வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவளிப்பதாக நம்முடைய ஓபிஎஸ் அறிவித்துள்ளார். அவரது வேட்பாளரை வாபஸ் பெற்று கொண்டிருக்கிறார். அதன் மூலம் எங்களுக்கும் ஒளி பிறந்திருக்கிறது. ஆகவே, நம்முடைய அண்ணன் ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் களத்தில் தற்போது இரு துருவங்களாக ஓபிஎஸ் – இபிஎஸ் நிற்கும் நிலையில், தேர்தல் சமயத்தில் செங்கோட்டையன் ’நமது அண்ணன் ஓபிஎஸ்’ என்று பேசி இருப்பது, இடைத் தேர்தலுக்காக தங்களது மோதல்களை மறந்து மீண்டும் ஒன்று சேர்வார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கையில் சிகரெட்டுடன் ‘தெய்வ திருமகள்’ பேபி சாரா
மோசடியாளர்களிடமிருந்து பாதுகாப்பாய் இருப்பது எப்படி? வாட்சப் விளக்கம்!
