அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார கூட்டத்திற்காக பள்ளி முன்பு கட் அவுட் வைக்கப்பட்டிருந்த நிலையில் அக்கட்சியின் நிர்வாகி மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி நேற்று திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக பல்லடம் வந்த எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக பல்லடம் அதிமுக நிர்வாகிகள் சார்பில் பேனர்கள், கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
குறிப்பாக பல்லடம் என்.ஜீ.ஆர் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியின் வாயிலை மறித்து முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆகியோரின் பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.
சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் அரசு பள்ளியின் நுழைவு வாயிலை மறைத்து அதிமுகவினர் சார்பில் வைக்கப்பட்ட இந்த பேனரால் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகுந்த அவதி அடைந்தனர். மாணவர்களின் பெற்றோரும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த நிலையில் பள்ளி முன்பு கட் அவுட் வைத்தது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பேனர் வைத்ததற்காக அக்கட்சி நகரச் செயலாளர் ராமமூர்த்தி மீது 4 வழக்குகள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
