மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.200 கோடி ஊழலை கண்டித்து அதிமுக போராட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

ADMK protests against the Madurai Municipal Corporation.

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி அளவில் நடந்த ஊழலை கண்டித்து அதிமுகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாநகராட்சியில் சுமார் 200 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த முறைகேடு வழக்கில் மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார், வரிவிதிப்புக் குழு தலைவரின் கணவர் கண்ணன், செந்தில்பாண்டியன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாநகராட்சியின் முறைகேடான வரி விதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து முறையான விசாரணை நடைபெறாததைக் கண்டித்தும், மதுரையின் பல பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை புதுப்பிக்காமல் இருப்பது, மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்காத உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்து மாநகராட்சியை கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திமுக அரசை கண்டித்து மதுரை மாநகர், புறநகர் அதிமுக சார்பில் பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்புத் துணி அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில்,” கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என அண்ணா சொன்னார். திமுக தலைவராக கலைஞர் பதவியேற்ற பின் அண்ணா சொன்ன கூற்றை மறந்து கலெக்ஷன், கமிஷன், கரெப்ஷன் என மாற்றி விட்டார்கள்.அமைச்சர் கே.என்.நேரு 7.5 முதல் 10 சதவீதம் வரை கமிஷன் கேட்பதாக நான் சொல்லவில்லை, மக்களே சொல்கிறார்கள். மதுரையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு திட்டங்களை வெறும் பெயர் மட்டும் வைத்து வருகிறார்கள்.

திமுக ஆட்சி அமைத்த பின்பு 2 ஆண்டுகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டு மதுரை விமான நிலையம் சர்வதேச தரத்தில் உயர்த்தப்படும் என அமைச்சர் PTR சொன்னார். ஆனால் இதுவரை செயல்படுத்தவில்லை. நமக்கு பிறகு வந்த திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாகிவிட்டது. மதுரைக்கு மெட்ரோ திட்டம் வரக்கூடாது என திட்டமிட்டு திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றால் மத்திய அரசு பல கேள்விகளை கேட்க தான் செய்வார்கள், அதற்கு பதில் சொல்ல வேண்டியது தானே, அதை விட்டுவிட்டு மத்திய அரசை குறை சொல்கிறார்கள். மதுரைக்கு அறிவித்த டைடல் பார்க் திட்டம் செயல்படுத்தவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டி விட்டதாக அமைச்சர் மூர்த்தியை முதல்வர் பாராட்டுகிறார். காசு கொடுத்து கூட்டம் கூட்டுவது பெரிதல்ல, மதுரைக்கு இத்தனை திட்டங்களை மூர்த்தி பெற்று கொடுத்தார் என்று முதல்வர் சொன்னால் நாங்கள் மூர்த்தியை அல்ல அவரது கீர்த்தியையே பாராட்டுவோம்.

அண்ணாவையும், திராவிட கொள்கையையும் அதிமுக பின்பற்றுவதில்லை என துணை முதல்வர் உதயநிதி பேசுகிறார். எங்களுக்கா திராவிட கொள்கை இல்லை? நாங்களா அண்ணாவை பின்பற்றவில்லை? திமுக அண்ணா வழியில் என்ன செய்தார்கள்? ஒரு திட்டத்தை கூட திமுக அரசு செயல்படுத்தவில்லை.திமுக வைக்கும் பேனரில் கலைஞர் இருந்த இடத்தில் இன்று ஸ்டாலின் உள்ளார், ஸ்டாலின் உள்ள இடத்தில் உதயநிதி உள்ளார், நாளை அந்த இடத்தில் இன்பநிதி இருப்பாரே தவிர அண்ணா எங்கே?
மதுரை மாநகரிட்சியின் உள்ளே சென்றாலே பணம் எங்கே?பணம் எங்கே? என கேட்கிறார்கள். 2026 ஆட்சியில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share