அதிமுக சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டால் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (ஏப்ரல்14) கமலாலயத்தில் வெளியிட்டார்.

மேலும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் சொத்து பட்டியலையும் பார்ட் 4 வரை வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சொத்து பட்டியல் வெளியிடுவது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (ஏப்ரல் 15) பேசியுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் சுங்கச்சாவடி பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஊழலிலே திளைத்த கட்சி திமுக என்று உலகத்திற்கே தெரியும். திமுகவிற்கு எதிராக ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அதிமுக.
1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திமுகவினர் சொத்து பட்டியலை அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ளார்.
இந்த 1 இலட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாயை 100 ரூபாயாக அடுக்கினால் நிலவிற்கு கால்வாசி தூரம் சென்று விடலாம். அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டது ஒரு நல்ல விஷயம்.
ஆனால் வெளியிட்டதோடு மட்டுமில்லாமல் அந்த சொத்துகள் அனைத்தையும் முடக்கி அரசுடைமையாக்க அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுகவின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடுவேன் என்று சொல்லவில்லை. அவ்வாறு சொல்லியிருந்தாலும் எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை.
அதிமுகவினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிடட்டும் அதன் பின்னர் எங்களுடைய ரியாக்ஷனை நீங்கள் பார்ப்பீர்கள்.
அதிமுகவினரின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். மேலும் அதிமுகவினருக்கு மறைமுகமாக பூச்சாண்டி காண்பித்து மிரட்டல் விடுப்பது எல்லாம் எங்களிடம் பலிக்காது.
விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் திமுகவை மிஞ்ச யாரும் இல்லை. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு தமிழ்நாடே சந்தி சிரிக்கும் அளவிற்கு உள்ளது.
24 மணி நேரம் செயல்பட்டு வருகின்ற காவல் துறை அடிவாங்கும் துறையாக மாறி உள்ளது. ஒவ்வொரு காவலர்களும் இன்று வருத்தப்பட்டு கொண்டு இருக்கின்றனர்.
காவல் துறையை சேர்ந்த ஒருவர் என் வேலை போனாலும் பரவாயில்லை என் குழந்தையின் கால் போய் விட்டது. ஆனால் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று போராடுகிறார்.
இந்த இரண்டு வருடங்களில் காவலர்களுக்கு எதிராக பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. சட்டத்தைக் கையில் எடுத்து சட்ட விரோத செயல்களை செய்து வருகிறது திமுக.
காவல் துறை நிலைமை இன்று மிகவும் பரிதாபமாக உள்ளது” என்றார் ஜெயக்குமார்.

Comments are closed.