அதிமுகவினர் பதவியேற்க தடை கேட்டு திமுக முறையீடு!

Published On:

| By Balaji

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான திமுகவின் முறையீட்டை ஏற்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு நடந்த தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு, அதில் ஆளுங்கட்சியான அதிமுகவை விட திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியது. இந்த நிலையில் தேர்தலில் வெற்றிபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் நாளை காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஆனால், பல இடங்களில் திமுக வேட்பாளர்கள்தான் வெற்றிபெற்றதாகவும், ஆளுங்கட்சியினர் தலையீட்டின் பேரில் அதிகாரிகள் துணையோடு அதிமுகவினர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் திமுக குற்றம்சாட்டியது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக கரூர், தருமபுரி உள்ளிட்ட பல இடங்களில் திமுக நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவினர் பதவியேற்கத் தடை விதிக்க வேண்டுமென திமுக சார்பில் முறையிடப்பட்டது.

“திருவண்ணாமலை, நாமக்கல், தருமபுரி, திருவாரூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்ற நிலையில், அதனை மாற்றி அதிமுகவினர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து அதிமுக வெற்றிபெற்றுவிட்டது” என்று கூறி உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு இல்லத்தில் திமுக வழக்கறிஞர்கள் இன்று (ஜனவரி 5) முறையிட்டனர். இதனை அவசர வழக்காக ஏற்று விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.

ADVERTISEMENT

எனினும் திமுகவின் முறையீட்டை ஏற்க நீதிபதிகள் ஆதிகேசவலு, சத்திய நாராயணா ஆகியோர் மறுத்துவிட்டனர். தலைமை நீதிபதி அனுமதியில்லாமல் முறையீட்டை ஏற்க முடியாது என அவர்கள் தெரிவித்தனர். இதனால் விரைவில் தலைமை நீதிபதியிடம் இதுதொடர்பாக திமுக வழக்கறிஞர்கள் முறையீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share