நீதிமன்றம் வந்ததே தவறு: பன்னீருக்கு எதிராக வாதாடிய அதிமுக

Published On:

| By Gracy

வரும் ஜூலை 11 ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக் குழுவை தடை செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கு விசாரணை நேற்று தொடங்கி இன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் தத்தமது வாதங்களை முன் வைத்த நிலையில் இன்று (ஜூலை 8) அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர்  எஸ்.ஆர்.ராஜகோபால்  நீதிமன்றத்தில் ஆஜராகி தன் வாதங்களை வைத்தார்.

ADVERTISEMENT

 “எந்த பிரச்சினை தொடர்பாக தீர்மானம் கொண்டுவரவும், நிறைவேற்றவும்  பொதுக் குழுவுக்குத்தான் அதிகாரம் உள்ளது.  பன்னீர்செல்வம்  தாக்கல் செய்தது கட்சிக்கான வழக்கு அல்ல… தான் என்ற  தனி நபருக்காக தாக்கல் செய்த வழக்கு. பொதுக்குழுவை எதிர்த்து நீதிமன்றத்தை நாட  நீதிமன்றத்திடம் முன் கூட்டியே  முன் அனுமதி பெற வேண்டும். எனவே இந்த மனு விசாரணைக்கே உகந்தது அல்ல. 

15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பன்னீர்செல்வத்தின் மனுவிலேயே இல்லை. மேலும்  தனக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அதை பன்னீர்செல்வம் பொதுக்குழுவில்தான் விவாதித்திருக்க வேண்டும்.  அவர் நீதிமன்றத்துக்கு வந்திருக்கவே கூடாது. அந்த அடிப்படையில் பன்னீர்செல்வம் அதிமுக என்ற கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார். அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்ற புதிய வாதத்தை முன் வைத்தார் அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால். 

ADVERTISEMENT

 –வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share