தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசியல் கட்சியினரும் மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜூனன். இவரது மகள், மருமகன், பேத்தி ஆகிய மூன்று பேரும் கடந்த வாரம் மதுரையில் ஒரு திருமண நிகழ்வுக்காகச் சென்று வந்ததாகவும், இதையடுத்து அவர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் தற்போது கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து அம்மன் கே அர்ஜூனன், அவரது மனைவி உட்பட அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எம்.எல்.ஏ அம்மன் கே அர்ஜூனனுக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவர், கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு மற்றும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, அதிமுக அமைச்சர் கே.பி.அன்பழகன், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனி, பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மற்றொரு அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.அரசு, வசந்தம் கார்த்திகேயன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**-கவிபிரியா**
