உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கவில்லை என்று அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலுள்ள ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு நாளையும், வரும் 30ஆம் தேதியும் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிரமாகப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ளூர் அமைச்சர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் என்.ஆர்.சி ஆகியவை இஸ்லாமியர்களுக்கு எதிரானது எனக் கூறி நாடெங்கிலும் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், சிஏஏவுக்கு அதிமுக ஆதரவளித்தது. இந்த விவகாரம் உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரே இஸ்லாமிய அமைச்சரான நிலோபர் கபில், தான் வாக்குச் சேகரிக்க செல்லும் இடங்களில் எல்லாம் சிஏஏ, என்.ஆர்.சி குறித்த கேள்விகளை எதிர்கொண்டு வருகிறார். இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பாக நியூஸ் மினிட் ஊடகத்துக்கு நிலோபர் கபில் அளித்த பேட்டியில், “ஒரு இஸ்லாமியராக என்.ஆர்.சி குறித்து எனக்கும் பயம் இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்று பிரச்சாரத்தின்போது மக்களிடம் நிலோபர் கபில் விளக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
வேலூரின் ஒரு பகுதியில் தேமுதிக வேட்பாளருக்காக மக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்கும் அமைச்சர் நிலோபர் கபில், “பாஜகவோடு கூட்டணி வைத்திருந்ததால் கடந்த முறை நடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் ஓட்டு போடல. ஆனா, இந்த தடவை பிஜேபி அதிமுகவோட கூட்டணியில இல்ல. வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பாஜக கூட்டணி இல்ல. தேமுதிக கூட்டணியில இருக்குறாங்க. ஆகவே நீங்கள் இங்கு போட்டியிடும் வேட்பாளருக்கு வெற்றியைப் பெற்றுத் தர வேண்டும்” என்று பேசியுள்ளார். இந்த விவகாரம் அதிமுக, பாஜக தரப்பினர் மத்தியில் விவாதமாகியுள்ளது.,”
