அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இன்று (ஜூலை 11) தீர்ப்பளித்தார்.
இன்று காலை சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
கடந்த 7, 8 ஆம் தேதிகளில் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடர்பாக பன்னீர் தரப்பும், எடப்பாடி தரப்பும் காரசாரமான வாதங்களை முன் வைத்தனர். யாரும் எதிர்பாராத வகையில் ஜூலை 8 ஆம் தேதி மாலை இரு தரப்பு வாதங்களும் முடிந்த பின் தீர்ப்பை இன்று (ஜூலை 11) காலை 9 மணிக்கு வழங்குவதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்தார்.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிர்ச்சி அடைந்தனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் வெள்ளியோ, சனியோ தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால் ஒருவேளை அது தங்களுக்கு எதிராக அமைந்துவிட்டால் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் பொதுக்குழு கூடும் ஜூலை 11 ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு என அறிவித்ததன் மூலம் தங்களது மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லாமல் போனதாக ஓபிஎஸ் வழக்கறிஞர்கள் வேதனையுடன் நீதிமன்ற வளாகத்திலேயே முணுமுணுத்தனர். இது தொடர்பாக வெள்ளி இரவே அவர்கள் தலைமை நீதிபதியை அணுக முயற்சித்ததாக தகவல் வெளியானது. ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.
இந்த நிலையில்தான் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாகியிருக்கும் நிலையில் இன்று காலை 8.35 மணிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நீதிமன்றத்துக்கு வந்தார்.சரியாக 9 மணிக்கு தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார், அப்போது அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை இல்லை என்று தீர்ப்பளித்தார் நீதிபதி.
”பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென பெரும்பான்மையினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே பொதுக்குழுவை நடத்தத் தடையில்லை” என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி,
–வேந்தன்
