அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் திமுகவில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் இன்று (ஆகஸ்ட் 18) நேரில் சந்தித்து திமுகவில் இணைந்தார். லட்சுமணனுடன் அவருடைய ஆதரவாளர்களும் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அப்போது, திமுக பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொன்முடி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதமசிகாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதுதொடர்பாக நேற்றைய தினமே [அறிவாலயம் போகும் அதிமுக முன்னாள் எம்.பி](https://minnambalam.com/politics/2020/08/17/18/admk-ex-mp-goes-to-dmk-vilupuram) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், “அமைச்சர் சி.வி. சண்முகத்தால் புறக்கணிக்கப்பட்டு வரும் லட்சுமணனின் மனநிலையை அறிந்து அவருடன் திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அவர் திமுகவில் இணைவார்” எனத் தெரிவித்திருந்தோம்.
இணைப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லட்சுமணன், “தமிழகத்தின் நலன்களையும் உரிமைகளையும் காக்கும் கட்சி திமுகதான். தமிழகத்தில் வலுவான அரசு அமைய வேண்டி இருக்கிறது. ஆகவே, ஆளுமைமிக்க தலைமையின் கீழ் பணியாற்றுவதற்காக திமுகவில் இணைந்தேன். வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க அயராது பாடுபடுவோம்” என்று தெரிவித்தார்.
இந்த கொரோனா நெருக்கடி காலத்திலும் கூட அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற பிரச்சினைதான் நடப்பதாக குற்றம்சாட்டியவர், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவினரை ஒருங்கிணைக்க அமைச்சர் சி.வி.சண்முகம் முறையாக செயல்படவில்லை எனவும் தெரிவித்தார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த 2011-16 காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்டச் செயலாளராகவும், அமைச்சராகவும் இருந்த சி.வி.சண்முகம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக லட்சுமணனை மாவட்டச் செயலாளராக நியமித்தார் ஜெயலலிதா. பின்னர், மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆக்கினார். பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவருடைய தீவிர ஆதரவாளராக மாறினார் லட்சுமணன்.
2018 டிசம்பர் மாதம் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து லட்சுமணன் நீக்கப்பட்டு அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மாவட்டச் செயலாளராக அமைச்சர் சி.வி.சண்முகம் நியமனம் செய்யப்பட்டார். சமீபத்தில் மாவட்டப் பிரிப்பு நடந்தபோது விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தன்னை ஒரு பகுதிக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு சி.வி.சண்முகம் எதிர்ப்பு தெரிவித்ததால் மாவட்டம் பிரிக்கப்படவில்லை. மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்த லட்சுமணன் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.
[அறிவாலயம் போகும் அதிமுக முன்னாள் எம்.பி](https://minnambalam.com/politics/2020/08/17/18/admk-ex-mp-goes-to-dmk-vilupuram)
**எழில்**
