அதிமுக முன்னாள் எம்.பி.யும் முன்னாள் மாவட்ட செயலாளருமான ஒருவர் அண்ணா அறிவாலயம் செல்லவிருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் ராஜ்யசபா எம் பியும், தொழில் துறை அமைச்சர் எம்.சி சம்பத் ஆதரவாளருமான டாக்டர் லட்சுமணன், தற்போது திமுகவுடன் பேச்சு நடத்தி வருகிறார் என்கிறார்கள் விழுப்புரம் அரசியல் வட்டாரத்தினர்.
லட்சுமணன், தர்மயுத்தத்தின் போது ஓ.பன்னீரின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்ட மாசெவாக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட லட்சுமணன், தர்மயுத்தத்தின் போது ஓ.பன்னீருக்கு ஆதரவு தெரிவித்ததால் சசிகலாவால் நீக்கப்பட்டார். பின் எடப்பாடி-ஓபிஎஸ் அணிகள் இணைந்தபின் லட்சுமணனுக்கு எந்த செல்வாக்கும் இல்லை. அமைப்புச் செயலாளர் பதவிதான் அளிக்கப்பட்டது.
“அமைச்சர் சி.வி. சண்முகமும் லட்சுமணனும் அதிமுக லோக்கல் அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வருகிறார்கள். லட்சுமணன் மாசெவாக இருந்தபோது சண்முகத்தை முற்று முழுதாக ஓரங்கட்டினார். அதற்கு பதிலாக இப்போது சி.வி. சண்முகம் செய்துகொண்டிருக்கிறார்.
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் லட்சுமணன் சீட் கேட்டார். ஆனால் சட்டத்துறை அமைச்சர் சிவி. சண்முகம் தனது அரசியல் எதிர்காலத்தைக் கருதி, லட்சுமணனுக்கு சீட் கொடுக்க விடாமல் தடுத்து முத்தமிழ் செல்வனுக்கு சீட் வாங்கிக் கொடுத்து வெற்றி பெறவைத்தார். எம் .எல். ஏ. சீட் கிடைக்காத பட்சத்தில் மாவட்ட செயலாளர் பதவியை கேட்டு போராடிவந்தார் லட்சுமணன். தற்போது சி.வி. சண்முகம் வசம் இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், செஞ்சி, மயிலம், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர் ஆறு தொகுதிகள் இருக்கின்றன. அதிமுகவில் அண்மையில் நடைபெற்ற மாவட்டப் பிரிப்பில் அதைப் பிரித்து தனக்கு ஒரு மாசெ பதவிக்கு முயற்சித்தார் லட்சுமணன். ஆனால் அதையும் தடுத்து விழுப்புரம் மாவட்டத்தைப் பிரிக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டார் சி.வி. சண்முகம்.
அமைச்சர் சி.வி. சண்முகத்தால் புறக்கணிக்கப்பட்டு வரும் லட்சுமணனின் மனநிலையை அறிந்த திமுக தலைமை அவருக்குத் தூண்டில் போட்டுள்ளது. லட்சுமணன் திமுக தலைமையுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தை பற்றி திமுக மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடிக்கே கால தாமதமாகதான் தெரிந்துள்ளது. லட்சுமணன், அண்ணா அறிவாலயத்திற்குள் நுழையப்போகும் தகவல் உளவுத்துறை அதிகாரிகள் மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்து, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் சொல்லியுள்ளார். அதற்கு ஓபிஎஸ், ‘அவர் சண்முகம் மீது அதிருப்தியில் இருக்கிறார். அதனால் சண்முகம் மூலமாகவே பேசசொல்லுங்கள்’ என்று கூறிவிட்டார். இதையடுத்து முதல்வர் இதுகுறித்து அமைச்சர் சண்முகத்திடம் பேசியுள்ளார். ஆனால், சண்முகமோ தவிர்த்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
அடுத்த முயற்சியாக உளுந்தூர்பேட்டை எம். எல். ஏ.வும் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளருமான குமரகுருவிடம் பொறுப்பை ஒப்படைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதன் அடிப்படையில் லட்சுமணனிடம் விடாமல் பேசியுள்ளார் குமரகுரு. அப்போது, ‘முதல்வர் மீது எந்த வருத்தமும் இல்லை. அமைச்சர் சி.வி .சண்முகமும் அவரது அண்ணன் ராதாவும் செய்யும் அரசியல் பிடிக்கவில்லை. அதனால் ஒதுங்கிக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார் லட்சுமணன். லட்சுமணன் பேசிய விஷயத்தை அப்படியே முதல்வரிடம் சொல்லியுள்ளார் குமரகுரு. அதனால் லட்சுமணன் அறிவாலயம் போகும் முன்பே அவரை கட்சியிலிருந்து நீக்கலாமா என்று ஆலோசனையில் உள்ளது அதிமுக தலைமை” என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.
லட்சுமணன் வன்னியர் சமூகம் என்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் அவர் மூலமாக வன்னியர் வாக்குகளை வேட்டையாட திட்டமிட்டுள்ளது திமுக தலைமை.
**-வணங்காமுடி**
