சபாநாயகராக இருந்த தனபாலை முதல்வர் ஆக்கலாம் என நான் முன்மொழிந்தபோது, அதிமுக தலித் எம்.எல்.ஏக்களே எதிர்ப்பு தெரிவித்தனர் என திவாகரன் பேட்டியளித்துள்ளார்.
சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் தலித் சமூகத்தை சேர்ந்தவர் யாரும் முதல்வராக முடியாது என்று தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் அவருக்கு எதிராகவும் ஆதரவாகவும் தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது அவரிடம் திருமாவளவன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ”எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அப்போது சபாநாயகராக இருந்த தனபாலை முதலமைச்சராக ஆக்கலாம் என்று நான் முன்மொழிந்தேன்.
அதற்கு திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால் அப்போது அதிமுகவில் 38 தலித் எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் அவர்கள் அதற்கு ஒத்துவரவில்லை. எதிர்ப்பு தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார்.
மேலும், “எடப்பாடி பழனிச்சாமி உள்ளடக்கிய அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு விரைவில் நடைபெறும். மத்திய அரசோடு தி.மு.க. 24 மணி நேரமும் மோதல் போக்கை கடைபிடித்து வருவதால் தமிழக அரசுக்கு நிதிகள் வருவது இல்லை. இதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான். மோதல் போக்கை கைவிட்டு மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக சுமூகமான முறையை தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என திவாகரன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஃபார்முலா 4 கார் ரேஸ் : சென்னை போக்குவரத்தில் 3 நாட்களுக்கு முக்கிய மாற்றங்கள்!
“முதலீட்டுக்கான ஒரே சாய்ஸ் தமிழ்நாடு” – அமெரிக்காவில் தமிழில் முழங்கிய ஸ்டாலின்