10% இட ஒதுக்கீடு : சட்டத்தை உருவாக்கியதே திமுக – காங்கிரஸ் கூட்டணிதான்!

Published On:

| By Kavi

நாளை (நவம்பர் 12) நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.

உயர்சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு செல்லும் என்று கடந்த நவம்பர் 7ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்நிலையில் 10% இட ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்த முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். நவம்பர் 12ல் நடைபெறும் கூட்டத்துக்கு ஒரு கட்சி சார்பில் இரண்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தச்சூழலில் அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

முதல்வரின் அழைப்பு தொடர்பாக இன்று (நவம்பர் 11) அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,

“புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என்மீது படுத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு அதிபுத்திசாலி சொன்னது போல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு விஷயத்தில் தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கும் கதையாகச் சட்டமன்ற அனைத்து கட்சிகளையும் இன்றைய முதல்வர் துணைக்கு அழைக்கிறார்.

ஏறத்தாழ 17 ஆண்டுகள் மத்திய அரசில் கொஞ்சி குலாவிய போது மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, நீட் மற்றும் 10% பொருளாதார இட ஒதுக்கீடு போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு பூம் பூம் மாடு போல் தலையாட்டிவிட்டு இன்றைக்கு ஏதோ வறியவர்களைக் காக்க அவதாரம் எடுத்தது போல் நடித்து கொண்டிருக்கிறார்.

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு குறித்து ஆராய 2016 ஆம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி மத்திய அரசு. அந்த கமிஷன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இதற்கான சட்டத்தை உருவாக்கியதும் காங்கிரஸ் திமுக கூட்டணி மத்திய அரசுதான்.

திமுக சார்பில் அப்போது பதவியிலிருந்த மத்திய அமைச்சர்கள் அமைச்சரவையில் ஒப்புதல் அளித்ததும் நாடறிந்த உண்மை.

இந்த சட்டத்தை தான் தற்போதைய பாஜக அரசு 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது.

காரியம் வேண்டுமென்றால் யார் காலையும் பிடிப்பதும் காரியம் முடிந்தவுடன் காலை வாருவதையும் கொள்கையாகக் கொண்ட திமுக தலைமை தற்போது பாஜக தேவை இல்லை என்பதால் இந்த சட்டத்தை எதிர்ப்பது போல் நடிக்கிறது.

வழக்கு நிலுவையிலிருந்தபோது ஆலோசிக்காமல், தீர்ப்புக்குப் பின் கட்சிகளை அழைப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.

இன்றைய நிலையில் தமிழக சட்டமன்றத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் திமுக தயவால் அங்கு இடம் பெற்றவை.

அவற்றில் இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் முதல்வரின் இரட்டை வேடத்தைப் புரிந்துகொண்டு முதல்வரின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. 10சதவிகித இட ஒதுக்கீட்டை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளன.

ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்பேன் என்று கூறி மக்களை ஏமாற்றியது போல், இந்த காங்கிரஸ் – திமுக கூட்டணி மத்தியில் ஆணட்சி செய்தபோது கொண்டு வந்த இந்த பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு விஷயத்திலும், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு / மறு சீராய்வு செய்வதற்கு என்று ஆலோசனை பெறும், சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற இந்த திமுகவின் கபட நாடகத்தைத் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பிரியா

ரெட் அலர்ட் : புழல் ஏரியில் நீர்திறப்பு அதிகரிப்பு!

ட்விட்டர் திவால்: எலான் மஸ்க் தரும் ஷாக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share