விளம்பர மோகம் கொண்ட வெற்று அறிவிப்புகள் : பட்ஜெட் மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்!

Published On:

| By christopher

admk bjp attack tn budget 2025 26

தமிழ்நாட்டின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (மார்ச் 14) தொடங்கியது. அப்போது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

இதனை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன. admk bjp attack tn budget 2025 26

அதேவேளையில் எதிர்க்கட்சிகளான பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பட்ஜெட் குறித்து கடும் விமர்சனம் முன்வைத்து வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி :

பட்ஜெட் குறித்து இன்று காலை சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “பட்ஜெட்டில் நிறையப் புதியத் திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இந்தத் திட்டத்திற்கு தேவையான நிதி எங்கிருந்து கிடைக்கும் என்று தெரியவில்லை. 2021 சட்ட மன்றத் தேர்தலின்போது திமுக 525 அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்கள். அதில் 15 சதவிகித அறிவிப்புகள் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால் ஸ்டாலின் கடந்த 4 ஆண்டுகளில் 95 சதவிகிதப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகப் பொய்யானத் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

அதில் சிலவற்றை குறிப்பிடுகிறேன். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் சொல்லி இருந்தார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதான் திமுக அறிவிப்பின் லட்சணம். கல்வி கடன் ரத்து, நூறு நாள் வேலைத்திட்டம் 150 நாளாக மாற்றுதல் அவர்களின் ஊதிய உயர்வு, எரிவாயு சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை, ரேஷன் கடைகளில் 1 கிலோ கூடுதல் சர்க்கரை என பல விஷயங்களைத் தேர்தல் நேரத்தில் அறிவித்திருந்தார்கள். ஆனால் பட்ஜெட்டில் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஸ்டாலின் எப்போதும் ஒரு திட்டத்தை அறிவிப்பார். அதற்கு குழு ஒன்றை அறிவிப்பார். ஆனால் அந்த குழுவின் நடவடிக்கைப் பற்றி எதுவும் அறிவிக்க மாட்டார்கள். மொத்தத்தில் முதல்வரும், துணை முதல்வரும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள முனைப்பு காட்டுகிறார்கள். ஆனால் மக்களின் பிரச்னையைக் கண்டுகொள்வதில்லை. இன்றைய ஆட்சி வெறும் விளம்பரத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. 2026 தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்” என எடப்பாடி தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை :

வழக்கம் போல, கழகக் கண்மணிகளின் ஒரு நாள் கரகோஷத்துக்காக, வெற்று விளம்பர அறிவிப்புகள் நிரம்பிய பட்ஜெட்டை வெளியிட்டு, தனது ஆண்டொரு நாள் கடமையை நிறைவு செய்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

தனது தேர்தல் வாக்குறுதிகளாக திமுக கொடுத்த பல முக்கியமான வாக்குறுதிகளைக் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று நான்கு ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருந்த பல்வேறு தரப்புப் பொதுமக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றத்தில் தள்ளியிருக்கிறது இந்த பட்ஜெட்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ.7,890 கோடி ரூபாய் அறிவித்தார்களே தவிர ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. இந்த ஆண்டு, ஒகேனக்கல் என்ற பெயரே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு, சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறையின் கீழ் அறிவிக்கப்பட்ட பூஞ்சோலை திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. இது தவிர, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களைப் பெயர்மாற்றி வெளியிட்ட அறிவிப்புகள் தவிர, மக்களுக்கான எந்தத் திட்டங்களும் இல்லாத, வழக்கமான திமுக பட்ஜெட்டாகவே இந்த ஆண்டும் இருக்கிறது.

ஆனால், இத்தனை ஆண்டுகளாக இலைமறை காயாக தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கேற்ற அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்த திமுக அரசு, இனி வரும் எந்த ஆண்டுகளிலும் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்காது என்பது தெரிந்ததும், வெளிப்படையாகவே சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது.

தமிழக அரசின் வருமானத்தில் முக்கியப் பங்கு வகிப்பது, டாஸ்மாக் மதுபான விற்பனை. சுமார் 50,000 கோடி ரூபாய் வருமானம் டாஸ்மாக் மூலம் கிடைக்கிறது. மது விற்பனை வருமானம் இல்லாத குஜராத் அரசு, ரூ. 19,695 கோடிக்கு வருமான மிகை பட்ஜெட் தாக்கல் செய்கிறது. ஆனால் தமிழகம் ரூ.46,467 கோடிக்கு பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறது. குஜராத் அரசு உட்கட்டமைப்புக்குச் செலவிடும் தொகை ரூ.95,472 கோடி. தமிழகம் அதை விட மிகக் குறைவாக, ரூ.57,231 கோடி மட்டுமே உட்கட்டமைப்புக்குச் செலவிடுகிறது. குஜராத் மாநிலத்தின் கடன் ரூ.3.7 லட்சம் கோடியாக இருக்கையில், தமிழகத்தின் கடன் கிட்டத்தட்ட மூன்று மடங்காக, ரூ.9.62 லட்சம் கோடியாக இருக்கிறது. நான்கு ஆண்டுகளில் நாட்டிலேயே மிக அதிக கடன் பெற்ற மாநிலமாக மாற்றியிருப்பதுதான் திமுக அரசின் சாதனை.

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது. வெற்று விளம்பர அறிவிப்புகளும், அதற்கான வீண் செலவுகளும் உயர்ந்துள்ளது. திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டின் கடனை ரூ. 10 லட்சம் கோடியை நோக்கி உயர்த்தியது தான் திமுக அரசின் சாதனை.
2024-25ல் பட்ஜெட் மதிப்பீடுகளில் மத்திய வரிகளில் தமிழ்நாட்டிற்கான பங்கு ரூ 47 ஆயிரத்து 755 கோடியாக மதிப்பிடப்பட்டது. ஆனால் திருத்திய மதிப்பீடுகளில் ஆயிரத்து 4 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கிய நிதி கடந்த 2024-25ம் நிதியாண்டில் அதிகரித்திருப்பதை திமுக அரசே ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், இதை வெளிப்படையாக சொல்ல மனமில்லாமல், வழக்கம்போல மத்திய அரசு நிதியை குறைத்து விட்டது.

தேசிய பொருளாதார வளர்ச்சியில் சதவீத பங்களிக்கும் தமிழ்நாட்டிற்கு வெறும் 4 சதவீதம் மட்டுமே நிதி வழங்கப்படுகிறது என எப்போதும் போலவே பட்ஜெட்டிலும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாநிலங்களுக்கான நிதி பங்கீடு, கடந்த திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்ததைவிட அதிகமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

சுமார் 15 ஆண்டுகள் மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது தமிழ்நாடு எவ்வளவு கொடுக்கிறதோ, அதே அளவு நிதியை பெற ஏன் முயற்சிக்கவில்லை? அப்போது வலுவான மத்திய அமைச்சர் பதவிக்காக தமிழகத்தின் உரிமையை பறிகொடுத்துவிட்டு இப்போது திமுகவினர் நாடகமாடி வருகின்றனர்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ 100 மானியம், பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரி குறைப்பு மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கீடு பழைய ஓய்வூதியத் திட்டம் மூன்றரை லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் திறைவேற்றப்படவில்லை. மொத்தத்தில் விளம்பர மோகம் கொண்ட வெற்று அறிவிப்புகள் கொண்ட பட்ஜெட்டாகவே உள்ளது. இது மக்களை ஏமாற்றும், மக்களுக்கு எந்த வகையிலும் பலனளிக்காத பட்ஜெட்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் :

மாநிலத்தின் உற்பத்தி திறன், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டிய நிதிநிலை அறிக்கை, திமுக அரசின் வீண் விளம்பரங்களும், நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளும் நிறைந்ததாக அமைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தின் தலையாய பிரச்னையாக உருவெடுத்திருக்கும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களால் தமிழகத்தில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்குகளை சீரமைப்பது தொடர்பாகவோ, அதற்கு அடிப்படை காரணமாக திகழும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாகவோ எந்தவித தகவலும் நிநிநிலை அறிக்கையில் இடம்பெறாதது தமிழக மக்கள் மீதான திமுக அரசின் அக்கறையின்மையை காட்டுகிறது.

ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் ஒதுக்கப்படும் நிதியின் அளவு அதிகரிக்கிறதே தவிர, அரசுப்பள்ளிகளின் தரமோ, அதில் பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனோ உயர்ந்ததாக தெரியவில்லை. அதைப் போலவே பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடும் தொடர்கதையாகி வருவதன் மூலம் நிதிநிலை அறிக்கையில் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுகிறது.

அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு லட்சம் பணியிடங்களை கூட நிரப்பாத திமுக அரசு, நடப்பாண்டில் மேலும் 40 ஆயிரம் பேர் மட்டுமே பணி நியமனம் செய்யப்படுவார்கள் என நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருப்பது அரசுப்பணி கனவில் இரவு பகலாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் உயர்கல்வி சிறக்க ஜெயலலிதா அறிமுகப்படுத்திய விலையில்லா மடிக்கணினி திட்டத்தை நிதிச்சுமை காரணம் காட்டி நிறுத்தி வைத்த திமுக அரசு, தற்போது 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என அறிவித்திருப்பது அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.

மேலும், தமிழக அரசின் கடன்சுமை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வது திமுக அரசின் செயலற்ற நிர்வாகத்தை வெளிப்படுத்துவதோடு, அதிக கடன்கள் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்க வேண்டும் என்பதை திமுக அரசு இலக்காக நிர்ணயித்திருக்கிறதோ? என்ற கேள்வியைதான் எழுப்பத் தோன்றுகிறது.

ஒட்டுமொத்தமாசு பார்க்கும் போது, பிரச்னைகளுக்கு தீர்வு என எதுவுமே இல்லாமல் திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கைக்கான தலைப்பை எல்லார்க்கும் எல்லாம் என்பதற்கு மாறாக எவருக்கும் எதுவுமில்லை என்று வைத்திருந்தால் பொருத்தமானதாக இருந்திருக்கும்.

தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே.வாசன்

தமிழக அரசு, தாக்கல் செய்திருக்கும் நடப்பு ஆண்டிற்கான (2025-2026) பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் உகந்ததாக அமையவில்லை.

நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்கான, கடன் சுமையை குறைப்பதற்கான அழுத்தமான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

2026 தேர்தலை கவனத்தில் கொண்டு, வாக்கு வங்கிக்காக இந்த பட்ஜெட்டில் திட்டங்களும், நிதியும், அறிவிப்புகளும் இடம் பெற்றிருக்கின்றன. மக்களை திசை திருப்புவதற்காக, பல்வேறு துறைகளின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்காத, லஞ்சம், ஊழலை அகற்ற முடியாத தமிழக அரசை புகழ் பாடி, மத்திய அரசை குறை சொல்லும் பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது.

எனவே நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் தமிழக மக்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்யாத, எதிர்பார்ப்பை நிறைவேற்றாத ஏமாற்றும் பட்ஜெட் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share