என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ADMK and BJP Alliance
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (ஏப்ரல் 11) சென்னை வந்த நிலையில் அவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய அமித்ஷா, “இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும், அதிமுகவின் தலைவர்களும் ஒன்றாக இணைந்து இந்த கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம்.

அடுத்து வரப்போகிற 2026 சட்டமன்றத் தேர்தலை என்டிஏ கூட்டணியில் நாங்களும் மற்ற கட்சிகளும் இணைந்து சந்திக்க இருக்கிறோம். வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்” என்று கூறினார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்ற அமித் ஷாவுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம்; மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம்.
மாமனிதர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம்.
தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
அதே சமயம் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஏதோ ஒரு அழுத்தம் காரணமாகத்தான் மீண்டும் பாஜகவுடன் எடப்பாடி கூட்டணி சேர்ந்திருக்கிறார் என்று விமர்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ADMK and BJP Alliance