என்.ஆர்.காங்கிரஸுக்கு காமராஜர் நகர் தொகுதி: அதிமுக

Published On:

| By Balaji

அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸுக்கு புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்மாநில சபாநாயகராக இருந்த வைத்தியலிங்கம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அத்தொகுதி காலியாக இருந்துவந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளோடு புதுச்சேரியின் காமராஜர் நகர் தொகுதிக்கும் வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அங்கு அதிமுக போட்டியிடுகிறதா அல்லது யாருக்கேனும் ஆதரவளிக்கிறதா என்பது தெரியாமலேயே இருந்துவந்தது.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், காமராஜர் நகர் இடைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை இன்று (செப்டம்பர் 26) மாலை நடத்தப்பட்டது. அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸுக்கு காமராஜர் நகர் தொகுதியை ஒதுக்கீடு செய்வது என முடிவெடுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ADVERTISEMENT

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜக, காமராஜர் நகர் இடைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, விருப்ப மனுக்களையும் பெற்றுவந்தது. இதனால் அந்தத் தொகுதியில் அதிமுக ஆதரவுடன் பாஜக போட்டியிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக என்.ஆர்.காங்கிரஸுக்கு காமராஜர் நகர் தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளது அதிமுக. மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த என்.ஆர்.காங்கிரஸுக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share