அதிமுக பொதுக்குழு வழக்கு ஒத்திவைப்பு!

Published On:

| By Kalai

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று விசாரணையை வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவும், அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

ADVERTISEMENT

இதனை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்தார். ஆனால், எடப்பாடி அப்பீல் செய்ததில் பொதுக்குழு செல்லும் என்று உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் தீர்ப்பு வழங்கினர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவு பொதுக்குழு வைரமுத்துவும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு கடந்தமுறை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை நவம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் இவ்வழக்கு இன்று (நவம்பர் 21) நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான் சூ துலியா ஆகியோர் அடங்கிய வேறு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நவம்பர் 19 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யவும், ஆவணங்களை தாக்கல் செய்யவும் அவகாசம் கேட்டு வழக்கை 2 வாரகாலம் ஒத்திவைக்க கோரிக்கை வைத்தார்.

ADVERTISEMENT

ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொதுக்குழு வழக்கை உடனே விசாரித்து உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று விசாரணையை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கலை.ரா

அதிமுக பொதுக்குழு அப்பீல்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தாமதம் ஏன்? 

சிவசங்கர் பாபாவுக்கு நெருக்கடி: வழக்கு ரத்தான உத்தரவு வாபஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share