உரிய சட்ட அனுமதியை பெற்ற பின்னரே ஆதியோகி சிலை கட்டப்பட்டது என்று ஈஷா யோகா மைய நிர்வாகி தினேஷ் ராஜா தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.
அதில்,“மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும், வன விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டு, பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும், அந்த வனப்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறி, அவற்றிற்கு தடை விதிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
“கோவை ஈஷா அறக்கட்டளையில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களை கட்டுவதற்காக எந்த ஒரு முன் அனுமதியோ, தடையில்லா சான்றிதழோ பெறவில்லை“ என்று தமிழக அரசு தெரிவித்தது.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், “ஈஷா அறக்கட்டளை தரப்பு தாக்கல் செய்துள்ள ஆவணங்களை கோவை நகர திட்ட இணை இயக்குநர் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வில் அதில் சம்மந்தப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை என்று தெரியவந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து தங்களிடம் உரிய ஆவணம் இருப்பதாக ஈஷா மையம் தெரிவித்தது. அதற்கான சான்றிதழ்களை இன்று வெளியிட்டுள்ளது.
இன்று (செப்டம்பர் 2) ஈஷா யோகா மையத்தின் நிர்வாகி தினேஷ் ராஜா சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “ஆதியோகி சிலை 2017ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பொதுவாக, இதுபோன்ற சிலைகளை நிறுவுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். அந்த வகையில், ஆதியோகி சிலை அமைப்பதற்கு அனுமதி கோரி 2016ஆம் ஆண்டே விண்ணப்பிக்கப்பட்டது.
இந்த விண்ணப்பத்தை ஏற்று மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறைகளின் ஆய்வு அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் சிலை அமைப்பதற்கு 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுமதி வழங்கினார்.
இந்நிலையில், ஆதியோகி சிலை திறப்பை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் ஒரு அமைப்பு 2017ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது. அந்த வழக்கும் கடந்த மாதம் முடித்து வைக்கப்பட்டது.
எனவே, எவ்வித அனுமதியும் இன்றி ஆதியோகி சிலை கட்டுப்பட்டுள்ளது என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது. அதுமட்டுமில்லாமல், ஆதியோகி என்பது ஒரு சிலை, அது கட்டிடம் அல்ல. சிலை வைப்பதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் தான் உள்ளது.
DTCPயின் (நகர மற்றும் கிராம திட்டமிடல் இயக்குநரகம்) அனுமதி வரம்பிற்குள் இது வராது. எனவே தான், DTCP தங்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை என நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதை நாங்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளிடமும் எடுத்துரைத்துவிட்டோம். அதனால் தான் இந்த வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்கு செல்லாமல் நிறைவு பெற்றது.
அத்துடன், உயர்நீதிமன்ற உத்தரவின் படி, எங்களிடம் உள்ள ஆவணங்களை நகரமைப்பு திட்டமிடல் துறையிடம் சமர்ப்பித்துவிட்டோம்” என்றார்.
அப்போது அவரிடம் மலைவாழ் மக்களுக்கு சொந்தமான 44 ஏக்கர் நிலத்தை ஈஷா ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த தினேஷ் ராஜா, “ஈஷா யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. அவர்கள் குறிப்பிடும் 44 ஏக்கர் நிலம் ஈஷாவின் பெயரில் இருப்பதை நிரூபித்தால் இப்போதே அதை திருப்பி கொடுக்க தயாராக உள்ளோம். இது தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவலில் அந்த 44 ஏக்கரில் ஈஷா எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
யானை வழித்தடம் மற்றும் யானை வாழ்விடத்தை ஆக்கிரமித்து ஈஷாவில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், அப்படி ஏதும் இல்லை என கூறினார்.
தமிழக வனத்துறையின் ஆர்டிஐ தகவல், தமிழக வனத் துறை அமைத்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அறிக்கை, இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் அறிக்கை மற்றும் இந்திய வனவிலங்கு அறக்கட்டளையின் ஆய்வு அறிக்கைகள் முறையே 2005 & 2017 ஆகிய அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட வேண்டிய யானை வழித்தடங்கள் குறித்தான ஆய்வு அறிக்கைகள் எதிலும் ஈஷா மையம் அமைந்துள்ள பகுதி வரவில்லை என்றும் தெரிவித்தார்.
இதுதவிர, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி, வனத்தை அழித்து ஆதியோகி சிலை கட்டப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் குறிப்பிட்டார்.
தமிழர் அல்லாதவரின் எரிச்சல்: விஜயலட்சுமியின் வீடியோவை வெளியிட்ட சீமான்
ஆதித்யா எல் 1: கனவு நிறைவேறியது… திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி பெருமிதம்!