மீண்டும் ஒரு ’ஆந்தாலஜி’!
தமிழில் ‘ஆந்தாலஜி’ வகைமை படங்கள் மிகக்குறைவாகத்தான் வந்திருக்கின்றன. சில்லு கருப்பட்டி, ஹாட் ஸ்பாட் மற்றும் ஓடிடி தளங்களில் கோவிட் காலத்தில் வெளியான சில ஆந்தாலஜி படங்கள் காரணமாக, அவ்வப்போது தியேட்டரிலும் அப்படிப்பட்ட படங்கள் வெளியாகின்றன. அந்த வரிசையில் இணைந்திருக்கிறது ‘அதர்மக் கதைகள்’.
காமராஜ் வேல் இயக்கியிருக்கும் இப்படத்தில் வெற்றி, சாக்ஷி அகர்வால், அம்மு அபிராமி, திவ்யா துரைசாமி, சுனில் ரெட்டி, பூ ராமு, ஸ்ரீதேவா உட்படப் பலர் நடித்துள்ளனர். சரி, டைட்டிலில் உள்ளது போல அதர்மத்தை முதன்மையாகக் கொண்டிருக்கிறதா இந்த ஆந்தாலஜி?!
நான்கு கதைகள்!
இந்தப் படத்தில் நான்கு கதைகள் தனித்தனியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை இணையும் புள்ளியும் படத்தில் காட்டப்பட்டிருக்கிறது.
கொலை முயற்சிக்கு இலக்கான ஒரு ரவுடிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதைச் சொல்கிறது முதலாவது கதை. அந்த ரவுடி எப்படிப்பட்ட ஆள் தெரியுமா என்று இதர நர்ஸ்கள் பயந்து ஒதுங்கி நிற்க, ஒரு பெண் மட்டும் தனது கடமை அது என்று முந்தி நிற்கிறார். சில மணி நேரங்களுக்குப் பிறகு மயக்கத்தில் இருந்து அந்த ரவுடி கண் விழிக்கிறார். அப்போது, அந்த நர்ஸை அவர் தவறான கோணத்தில் பார்க்கிறார். அப்போது, தான் யார் என்று நர்ஸ் சொல்வதோடு அப்படம் முடிவடைகிறது.
இரண்டாவது கதை, இணைய வழி சீட்டாட்டத்தில் வாழ்வு மொத்தத்தையும் தொலைத்த ஒரு இளைஞனைப் பற்றியது. காதல் மனைவி, குழந்தையின் மீது கவனம் செலுத்தாமல், சீட்டாட்டமே கதி என்று கிடந்து வேலையை இழக்கிறார். கடன் தொல்லைக்கு ஆளாகிறார். அந்த கடன் சுமையைச் சமாளிக்க முடியாமல் அவர் என்ன முடிவெடுத்தார் என்பதைச் சொல்கிறது.
மூன்றாவது கதையில், கடற்கரையோரமாக கடை போட்டிருக்கும் வியாபாரிகள், அங்கு வரும் மக்களிடம் வம்பு வளர்ப்பதையும் பணம் பறிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் மூன்று இளைஞர்கள். ஒருநாள் இரவில் ஒரு ஆணை அடித்துக் காயப்படுத்திவிட்டு, அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயல்கின்றனர்.
அப்போது, துப்பாக்கியால் பலூனைச் சுடும் கடையை நடத்தி வரும் ஒரு முதியவர் அவர்களைத் தடுக்கிறார். அவரை அடித்துவிட்டு அவர்கள் சென்றுவிடுகின்றனர். அதற்கடுத்த நாள் காலையில் அந்த பெண்ணின் பிணம் கரையொதுங்கிக் கிடக்கிறது. அதற்குப் பழி வாங்க, அந்த முதியவர் என்ன செய்தார் என்று சொல்கிறது இக்கதை. நான்காவது கதையானது, ஒரு பணக்காரத் தம்பதி குழந்தைப் பேற்றை அடைய வாடகைத்தாயாகச் சம்மதிக்கும் இளம்பெண்ணைப் பற்றியது.
குடும்ப வறுமை, தந்தையின் மருத்துவச் செலவை ஈடுகட்ட அவர்கள் தரும் பணம் உதவும் என்று அதனை ஒப்புக்கொள்கிறார் அப்பெண். ஐந்து மாதங்கள் வரை அந்தப் பெண்ணைச் சந்திக்க அந்த தம்பதியர் வந்து போகின்றனர்.
ஆறாவது மாதம் பணம் அனுப்பவும் இல்லை. இருவரும் வந்து பார்க்கவும் இல்லை. போன் செய்தால் பதிலும் கிடைப்பதில்லை. இந்த நிலையில், அவர்கள் வீட்டிற்கு அப்பெண்ணும் அவரது தாயாரும் செல்கின்றனர். அப்போது, அந்த தம்பதியர் விவாகரத்து செய்யவிருப்பது தெரிய வருகிறது. அது மட்டுமல்லாமல், அந்த குழந்தை வேண்டாம் என்று இருவருமே சொல்கின்றனர். அதன்பிறகு, அந்த இளம்பெண்ணின் கதி என்ன என்று சொல்கிறது இக்கதை. நான்கில் கடைசியாக இடம்பெற்றுள்ள கதை மட்டுமே நம்மை ரொம்பவும் ஈர்க்கிறது. மற்றவை சுமார் ரகத்தில் சேர்கிறது.
நல்ல முயற்சி!
முதல் கதையில் ’சதுரங்கவேட்டை’ வளவன் ரௌடியாக நடித்திருக்கிறார். அவரது அடியாட்களாக வருபவர்களும் கூட இதற்கு முன்னர் சில படங்களில் தலைகாட்டியவர்கள் தான். அம்மு அபிராமி இதில் நர்ஸ் ஆக நடித்திருக்கிறார். அந்தப் பாத்திரமோ, அதன் வடிவமைப்போ புதிதல்ல என்றபோதும், அவரது இருப்பு அதனை நோக்கி நம் கவனத்தைத் திருப்புகிறது.
இரண்டாவது கதையில் வெற்றியும் சாக்ஷி அகர்வாலும் இடம்பெற்றிருக்கின்றனர். வெற்றி வழக்கம்போல தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். சாக்ஷி பாடல் காட்சியில் வருமளவுக்கு, வசனம் பேசும் காட்சிகளில் ஜொலிக்கவில்லை.
மூன்றாவது கதையில் மறைந்த கலைஞர் பூ ராமு மட்டுமே நமக்குத் தெரிந்தவர். இயல்பாக நாம் பார்க்கிற சில முதியவர்களை நினைவூட்டுகிற வகையில், அக்கதையில் அவர் வந்து போயிருக்கிறார்.
நான்காவது கதை, நிச்சயமாகத் திரையில் கவனமாகச் சொல்லப்பட வேண்டியது. அதனை உணர்ந்து திவ்யா துரைசாமியும் அவரது தாயாக வருபவரும் நடித்துள்ளனர். சுனில் மற்றும் அவரது மனைவியாக நடித்த பூஜா வரும் காட்சிகள் நம்மை அக்கதையோடு ஒன்ற வைக்கின்றன.
இப்படத்திற்கு கே.கே., பரணி, ராஜிவ் ராஜேந்திரன், ஜெபின் ரெஜினால்டு ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர்.
நாகூரான் ராமச்சந்திரன், சதீஷ் குரசோவா, மகேந்திரன் கணேசன், கோபாலகிருஷ்ணன் படத்தொகுப்பைக் கையாண்டிருக்கின்றனர்.
ஏ.ஆர்.ரெய்ஹானா, எஸ்.என்.அருணகிரி, ஹரீஷ் அர்ஜுன், சரண்குமார் இசையமைத்திருக்கின்றனர்.
சரண்குமாரின் ‘எனதுயிரே நீயடி’ மற்றும் அருணகிரியின் ‘யாரடா நீ நீ’ பாடல்கள் நம்மைச் சட்டென்று தொடுகின்றன. பின்னணி இசை ஈர்க்கும்படியாக இல்லை.
எஸ்.ஏ.ராஜா இதில் கலை இயக்குனராகப் பணிபுரிந்திருக்கிறார். பழி வாங்குதல் என்பதை மையப்படுத்தி நான்கு கதைகளும் எழுதப்பட்டிருக்கின்றன. அதற்கேற்ப அவற்றின் தலைப்புகளும், முடிவில் சொல்லப்படும் நீதிக்கருத்துகளும் இருக்கின்றன.
ஏற்கனவே சொன்னது போன்று நான்காவது கதையின் எழுத்தாக்கத்தில் காட்சியாக்கத்தில் இருந்த நேர்த்தி மற்றவற்றில் குறைவு. பட்ஜெட் குறைவு என்பதோடு, எழுத்தாக்கம் சீரிய வகையில் அமையாத காரணத்தால், மொத்தமாகச் சில குறும்படங்களைப் பார்த்த உணர்வே எழுகிறது.
அதேநேரத்தில், நல்லதொரு முயற்சி என்று எண்ணத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் காமராஜ் வேல். ‘வழக்கமான சினிமா பார்க்க வேண்டாமே’ என்பவர்கள் ‘அதர்மக்கதைகள்’ பார்க்கலாம். ஓடிடி வெளியீட்டின்போது இப்படம் கூடுதல் கவனிப்பைப் பெறக்கூடும்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“இளைஞர்கள் அரசியலுக்கு வர விரும்புகிறார்கள்” – மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி பேச்சு!
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்… தமிழகத்தில் எப்போது? – அன்புமணி கேள்வி!
Comments are closed.