தர்பூசணி பழங்களில் நிறமூட்டி கலப்பா?: உணவு பாதுகாப்புத் துறை சொல்வது என்ன?

Published On:

| By Kavi

கோடை காலம் நெருங்கி விட்டதால் தமிழகத்தில் சாலை ஓரங்களில் தர்பூசணி, சாத்துக்குடி, இளநீர் மற்றும் குளிர்பான கடைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. Add coloring to watermelons

அதே சமயம் தர்பூசணி பழத்தில் சுவைக்காகவும் சிவப்பு நிறத்திற்காகவும் செயற்கை நிறமூட்டி ஊசிகள் செலுத்தப்படுவதாக வீடியோக்கள் வெளியாகின. அதாவது தர்பூசணி பழத்தை வெட்டி அதில் டிஸ்யு பேப்பரை வைத்து தேய்த்து பார்த்தால் அதில் சிவப்பு நிறம் ஒட்டும் . அப்படியானால் அது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழம் அல்லது நிற ஊசிகள் செலுத்தப்பட்டிருக்கலாம் என்று அந்த வீடியோவில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்திருந்தார். 

இதனால் தர்மபுரியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகளும் விவசாயிகளின் நிலத்துக்கு சென்று தர்பூசணி பழங்களை ஆய்வு செய்தனர்.

இந்த விவகாரம் தர்பூசணி விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.  50 ஆயிரம், 60 ஆயிரம் ரூபாய் செலவு செய்து நாங்கள் பயிர் செய்தால் வதந்திகளை பரப்புவதாக கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இதுபோன்ற வீடியோக்களால் வியாபாரமும் பாதிக்கப்படுவதாக தர்பூசணி பழ வியாபாரிகள், இன்று (ஏப்ரல் 3) சென்னை கோயம்பேட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தர்பூசணி குறித்து ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரப்பப்படும் உண்மையற்ற செய்திகளால் பொது மக்களிடம் தர்பூசணி பழம் குறித்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அதன் விற்பனையும் பெருமளவில் குறைந்து விட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

எனவே தர்பூசணி பழங்கள் தொடர்பாக நிலவும் அர்த்தமற்ற அச்சங்களை போக்கும் வகையில் தர்பூசணி பழங்களின் நன்மைகள் குறித்தும் அவற்றின் தன்மை குறித்தும் தமிழக அரசு ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். 

இந்த நிலையில் இன்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சென்னையில் தர்பூசணி பழம் குறித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தர்பூசணி பழங்களை வைத்து, சோதனை செய்து காட்டினார். ஒரு டிஸ்யு பேப்பரை தர்பூசணியில் தேய்த்து போது, அதில் லேசாக இளம் சிவப்பு நிறம் ஒட்டியது.

இதையடுத்து, இதுபோன்ற  பழங்களை மக்கள் தாராளமாக சாப்பிடலாம். அதில் எந்த பயமும் தேவையில்லை என்று தெரிவித்த அவர், “யாரெல்லாம் தவறு செய்கிறார்களோ அவர்களை உணவு பாதுகாப்புத் துறை பார்த்துக்கொள்ளும், 99.9 சதவிகித வியாபாரிகள் எந்த தவறும் செய்யவில்லை. இது நாங்கள் ஆய்வு செய்த போது தெரியவந்தது. 

எந்த விவசாயிகள் மீதும் நாங்கள் குற்றம்சாட்டவில்லை. எந்த விவசாயி மீதும் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. கலப்படம் செய்த பொருளை கண்டுபிடிப்பது எப்படி என்பதை மட்டும்தான் நாங்கள் விளக்கி வருகிறோம். எப்எஸ்எஸ்ஐ தளத்திலும் வீடியோ வெளியிடப்பட்டது. 

இயற்கை பழங்களின் நிறத்திற்கும், நிறமூட்டி கலந்த பழங்களின் நிறத்திற்கும் உள்ள வேறுபாட்டை ஒரு எளிய பரிசோதனை மூலம் கண்டறியலாம். அதைத்தான் செய்து காட்டினோம். பழத்தில் அதிக இனிப்பு அல்லது சர்க்கரை பாகு சுவை இருந்தால், அதில் நிறமூட்டி கலந்திருக்கலாம். அப்படியான பழங்களை சாப்பிட வேண்டாம். அதுபோன்று எலிகள் கடித்த பழங்களை சாப்பிட வேண்டாம்” என்று  அறிவுறுத்தினார். Add coloring to watermelons

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share