இந்தியாவின் அதானி குழுமம் TIME இதழின் 2024 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது,
தொழில்துறையில் முன்னணி நிறுவனங்களை தரவரிசைப்படுத்தும் முன்னணி நிறுவனமான ஸ்டேடிஸ்டாவுடன் இணைந்து டைம் இதழ் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஊழியர்களின் திருப்தி, வருவாய் வளர்ச்சி , சம்பளம், மற்றும் வர்த்தகத்தின் நிலைத்தன்மை, பணி சூழல் உள்ளிட்ட பல காரணிகளை கொண்டு 1 லட்சத்து 70 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் 50 நாடுகளில் 1,000 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தாண்டி வருவாய் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த குழுமத்தின் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட், அதானி போர்ட்ஸ் லிமிடெட், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் , அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் , அதானி டோட்டல் கேஸ் லிமிடெட், அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட், அதானி பவர் லிமிடெட், அதானி வில்மர் லிமிடெட் ஆகியவை சிறந்த நிறுவனங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு, அதானி குழுமம் இயங்குகிறது. எரிசக்தி , போக்குவரத்து , தளவாட உற்பத்தி, சுரங்கத்துறை என பல்வேறு வர்த்தகங்களில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகவும் இது பார்க்கப்படுகிறது.
அதானி குழுமத் தலைவரான கௌதம் அதானி பள்ளி படிப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டவர். இவர் கடந்த 1977 ஆம் ஆண்டு மும்பை ஜெய்ஹிந்த் கல்லூரியில் படிக்க விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவருக்கு படிக்க இடம் கிடைக்கவில்லை.
இதையடுத்து, படிப்புக்கு முழுக்கு போட்ட அதானி, வைரம் பட்டை தீட்டும் தொழிலை கற்றுக் கொண்டார். தொடர்ந்து, அவரால் தொடங்கப்பட்ட அதானி குழுமம் இன்று இந்தியாவின் மிகப் பெரும் வர்த்தக சாம்ராஜ்யமாக உருவாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்