கோவையில் நடிகை சமந்தாவுக்கும் இயக்குநர் ராஜ் நிதிமோருக்கும் இன்று (டிசம்பர் 1) திருமணம் நடைபெற்றுள்ளது. கழுத்தில் மாலையோடு தனக்கு ராஜ் நிதிமோர் மோதிரம் போட்டுவிடும் புகைப்படத்தை பகிர்ந்து இதனை சமந்தா உறுதிப்படுத்தியுள்ளார்.
சமந்தா ரூத் பிரபு மற்றும் ராஜ் நிதிமோரு ஆகியோர் பிரைம் வீடியோ தொடரான தி ஃபேமிலி மேன், சிட்டாடல்: ஹனி ஃபன்னியிலும் இணைந்து பணியாற்றினர். ராஜ் நிதிமோர் இயக்கத்தில் சமந்தா நடித்திருந்தார்.
அப்போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியதாக தகவல்கள் வருகின்றன. இருவரும் சேர்ந்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, வெளிநாடு செல்வது என இணைந்து செயல்பட்டு வந்தனர். ஆனால் இருவருக்கும் இடையேயான உறவை வெளிப்படையாக சொல்லவில்லை.

இந்தசூழலில் இருவரும் இன்று (டிசம்பர் 1) கோவை ஈஷா யோகா மையத்தில் இருக்கும் லிங்க பைரவி கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

ராஜுவும் ஏற்கனவே ஷ்யாமிலி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து விவாகரத்து பெற்றவர்.
நடிகை சமந்தாவும் ஏற்கனவே நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணம் நடந்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
