அஜீத் குமார் நடிப்பில் வெளியான ’என்னை அறிந்தால்’, கமல்ஹாசன் நடித்து வெளியான ‘உத்தம வில்லன்’, விஜய்யின் தி கோட் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை பார்வதி நாயர்.
இவர் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பகுதியில் வசித்து வருகிறார். இவர், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தனது வீட்டில் விலை மதிப்புள்ள மடிக் கணினி, செல்போன், 2 கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களை தனது வீட்டில் இரண்டு வருடங்களாகப் பணிபுரிந்து வந்த சுபாஷ் திருடிச் சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் சுபாஷ் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, பார்வதி நாயர் தன் மீது பொய் புகார் அளித்துள்ளதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சுபாஷ். மேலும் அவர் வேலை செய்யும் போது தன்னை துன்புறுத்தியதாகவும், தான் தங்கியிருந்த அறைக்கு வந்து பார்வதி நாயர், உள்ளிட்ட அவரது உதவியாளர்கள் 7 பேர் தன்னைத் தாக்கியதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது சம்பவத்தில் ஈடுபட்ட பார்வதி நாயர் உள்ளிட்ட அவரது உதவியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்படி பார்வதி நாயர் மற்றும் தயாரிப்பாளர் கோட்டப்பாடி ராஜேஷ், இளங்கோவன் செந்தில், அருண் முருகன், அஜித் பாஸ்கர் ஆகிய 6 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது சம்பந்தமாக சுபாஷ் சந்திரபோஸிடம் நாம் பேசினோம்.
எப்படி நடிகை பார்வதி நாயர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தீர்கள்? ஏன் உங்கள் மீது புகார் கூறினார்கள்?
”புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எல்லைப்பட்டி தான் என் சொந்த ஊர். சினிமா ஆசையில் ஏழு வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தேன். 2020 ஜூன் 17 ஆம் தேதி தாயாரிப்பாளர் கோட்டபட்டி ராஜீ அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அலுவலக பணிகளை கவனித்துக் கொண்டு பார்வதி நாயர் நடித்து வந்த ரூபம் படத்தில் உதவி இயக்குநராகவும் வேலை செய்தேன்.
அப்போது நடிகை பார்வதி நாயரை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். வீடியோ எடுக்கவும் வீடியோ எடிட்டிங்கும் எனக்கு தெரியும் என்பதால் அவருக்காக வேலை செய்யச்சொன்னார்கள். நானும் அந்த வேலைகளைச் செய்துகொண்டிருந்தேன்.
எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. அதனால் அவர்களிடம் லீவ் கேட்டேன். ஏற்கெனவே தயாரிப்பாளர் கோட்டபட்டி ராஜீவிடம் கூறிவிட்டேன். உங்களிடமும் சொல்கிறேன் என்று சொன்னேன். அப்ப அவங்க, ”நீங்க என்ன சாதி?” எனக் கேட்டாங்க. நானும், “நான் தலித் சமூகத்தை சேர்ந்தவன்” என்று கூறினேன். அதற்கு அவர், “என்ன தலித்தா?” என கேட்டு முகம் சுளித்தார்.
அதன் பின் என்னை நடத்துகிற விதம் மாறியது. அது எனக்கு சங்கடமா இருந்தது. அதனால் அவங்க முகத்துக்கு நேராக, ”என்னை இப்படி நடந்துவது சரியில்லை எனக்குப் பிடிக்காது” என்று சொல்லிவிட்டேன். அதை அவர்களால் ஜீரணிக்க முடியல. ஒரு வேலைக்காரன் நீ என்னை எதிர்த்துப் பேசுவதா? என்று கோபப்பட்டார்கள். சினிமாவில் வேறு எங்கும் வேலைக்கு சேர்ந்து விடக்கூடாது என்று என் மீது கடந்த 2022ஆம் ஆண்டு பொய்யான திருட்டு கேஸ் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் குடுத்தாங்க. ஒன்றரை வருசம் எதுவுமே செய்யாம இருந்தாங்க. நானே உயர்நீதிமன்றத்தை அணுகி அந்த வழக்கை முடிக்கச் சொல்லி முறையிட்டேன்” என்றவரிடம்,
திருட்டு வழக்கில் உங்களைக் கைது செய்ததாக தகவல் வெளியானதே?
அந்த வழக்கில் என்னை கைது செய்யவில்லை, திருடுப் போனது என்று சொன்ன பொருட்களோட விவரத்தைக் கூட பார்வதி நாயர் கொடுக்கல. அதனால் சம்பந்தப்பட்ட போலீஸ் உட்பட எல்லோர் பற்றியும் நான் புகார் கொடுத்தேன். அந்த விசாரணையில் அந்த கேஸ் முடிந்துவிட்டது. நான் எதுவும் திருடவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
அதன்பின், இரண்டாவதாக திருடப்பட்ட கருவிகளில் இருந்த கண்டெண்டை நான் சோசியல் மீடியாவில் லீக் செய்துவிட்டேன் என்று புகார் கொடுத்தார்கள். திருடவே இல்லை என்று வழக்கு விசாரணையில் முடிவான பின்பு,
இப்படி ஒரு புகார் கொடுக்கிறாங்க. இந்த கேஸ்ல நானே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டேன் என்று கேஜேஆர் பிரஸ்மீட்ல சொன்னாரு. அப்படிக் காட்டிய ஒப்புதல் வாக்குமூலத்துல என்னோட கையெழுத்தே இல்லை. ஆனால்
பார்வதி நாயர் என் மேல் கேஸ் கொடுத்துட்டு சுபாஷ் அப்படிப் பண்ணிட்டான் இப்படிப் பண்ணிட்டான்னு பேட்டி கொடுத்ததால என்னோட திருமணம் நின்னு போச்சு. இப்போ வரைக்கும் எனக்கு பெண் கிடைக்கல.
தொடர்ந்து 2022ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதிநான் நடிகை பார்வதி நாயர் மீது ஒரு புகார் கொடுத்தேன். அன்னைக்கு இரவே நான் தங்கியிருந்த இடத்துக்கு வந்து என்ன அடிச்சாங்க, பார்வதி நாயர் என் மேல் எச்சில் துப்பிவிட்டு, ”ஆப்ட்ரால் நீ ஒரு தாழ்த்தப்பட்ட நாய் நீ என்னையே எதிர்க்கிறியா?” என்று சொல்லிகிட்டே, இவன கொல்லுங்கடா என கத்துனாங்க. உடனே நான் லோக்கல் காவல் நிலையத்தில் பார்வதி நாயர் மீது கொடுத்த புகாரை வாங்க மறுத்து விட்டனர். அதனால் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். மூன்று நாட்கள் கழித்து சிஎஸ் ஆர் போடறாங்க. அப்புறம் அவங்க ஆறு பேரும் மன்னிப்பு கேட்டாங்கன்னு சொல்லி கேஸ முடிச்சாங்க. ஆனா அப்படி நாங்க சொல்லவே இல்லைன்னு கோர்ட்ல சொல்றாங்க. இதுல போலீஸ் அதிகாரி சீட்டிங் பண்ணியிருக்காங்கன்னு தெரிஞ்சது. அத நிரூபிச்சி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் எஃப் ஐ ஆர் பதிவு செய்ய உத்தரவு வாங்கினேன்.
முப்பது நாளாகியும் ஆக்சன் எடுக்கல. அவங்க இந்த வழக்கை தள்ளுபடி செய்யச் சொல்லி உயர்நீதிமன்றத்துக்கு போனாங்க. ஆனா அங்கேயும் என் புகார் சரி என்று சொல்லி அதன் மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாங்க. அந்த ஆர்டர் வந்து இருபது நாளாகியும் நடவடிக்கை எடுக்கல. நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தவில்லை என்று மாநகர காவல் ஆணையர்அருண் அவர்களை நேரடியாப் பார்த்து முறையிட்டேன். அதன்பின் ரெண்டு நாள்ல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற என்றவரிடம்
சினிமாவில் வாய்ப்பு தேடும் நீங்கள் பிரபலமான நடிகைக்கு எதிராக நீதிமன்றங்கள் மூலமாக சட்ட போராட்டத்தை எப்படி நடத்த முடிந்தது?
எந்தவொரு பண பயனையும் எதிர்பார்க்காமல் எனக்காக வழக்கறிஞர்கள் பெர்சியல் பெரிகல்ஸ், பிரியதரிஷினி, அப்துல்கான், பவித்ரன் சங்கர் ஆகிய நான்கு பேர், பாதிக்கப்பட்ட சாமனியனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக உதவி செய்தார்கள். அவங்களாலதான் எழும்பூர், சைதாப்பேட்டை, சிட்டி சிவில் கோர்ட், சென்னை உயர்நீதிமன்றம் என நான்கு நீதிமன்றங்களிலும் வழக்கு நடத்த முடிந்தது.
இப்படியொரு சட்டப் போராட்டம் தேவையா?
அதிகாரபலம், அரசியல் பலம், பண பலம் மிக்கவர்களை எதிர்த்து நியாயத்துக்காக போராட காரணம்
எனக்கு நீதி வேண்டும் என்பது மட்டுமின்றி எனக்கு நடந்த மாதிரி என்னை போன்ற சாமான்யர்களால் என்ன செய்யமுடியும் என்று நினைப்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். மற்றவர்களுக்கு இந்த மாதிரி நடந்துவிட கூடாது என்பதுதான். சாமானியனை, தாழ்த்தப்பட்டவனை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற அகம்பாவத்தை வேரறுக்கவே இந்தப் போராட்டம். நீதிமன்றத்தை நம்பிய எனக்கு நியாயம் கிடைத்துள்ளது என்றார்.
பிரச்சினை பெரிதானவுடன் சினிமாவில் வழக்கமாக கையாளப்படும் சமரச பேச்சுவார்த்தை உங்களிடம் நடத்தப்பட்டதா?
பலமுறை என்னிடம் சமாதானம் பேச வந்தாங்க. எனக்கு பார்வதிநாயரை தண்டிக்கணும்கிற எண்ணமெல்லாம் இல்லை. அவங்க திருந்தணும். இனிமேல் யாரிடமும் அவங்க இப்படி நடந்துக்கக் கூடாது என்பதுதான் என் எண்ணம்” என்று தெரிவித்து விடைபெற்றார்.
சுபாஷ் சந்திர போஸ் அளித்த புகாரின் பேரில், பார்வதி நாயர் உள்பட 7 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் கடந்த 22ஆம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது சம்பந்தமாக நடிகை பார்வதி நாயர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “சில தவறான தகவல்களும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் பரப்பப்படுகின்றன. நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக எனது சட்டக்குழு நடவடிக்கை எடுக்கும். விரைவில் உண்மை வெளிவரும், ‘ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் நன்றி : சிறை வாசலில் செந்தில் பாலாஜி பேட்டி!
471 நாட்களுக்கு பிறகு… ஜாமீனில் வெளியே வந்தார் செந்தில் பாலாஜி
Comments are closed.