நடிகை மீரா மிதுன் டெல்லியில் கைது- ஆகஸ்ட் 11-ல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போலீஸ்!

Published On:

| By Mathi

Actress Meera Mithun Arrested

பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய வழக்கு மற்றும் தாய் சியாமளா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்குகளில் டெல்லியில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் ஆகஸ்ட் 11-ந் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

மாடலிங் துறையை சேர்ந்த மீரா மிதுன் சினிமாவிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் சர்ச்சைகளை கிளப்பியவர். நடிகை மீரா மிதுன், சமூக வலைதளத்தில்வெளியிட்ட வீடியோவில் பட்டியல் இன மக்களை (தலித்துகளை) இழிவாக விமர்சித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். மீரா மிதுன் மீது போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

இது தொடர்பான வழக்கில் நடிகை மீரா மிதுன் 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். மீரா மிதுன் நண்பர் சாம் அபிஷேக் எனபவரும் கைது செய்யப்பட்டார். இருவரும் சிறையிலடைக்கப்பட்ட நிலையில் ஜாமீன் கிடைத்ததால் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வழக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் மீரா மிதுன் ஒரு முறை கூட ஆஜராகவில்லை. இதனால் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ந் தேதி மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் மீரா மிதுன் கைது செய்யப்படவில்லை. அவர் தப்பி ஓடி தலைமறைவானதாக கூறப்பட்டது. ஆனால் பிடிவாரண்ட்டை இத்தனை ஆண்டுகளாக போலீசார் செயல்படுத்தாமல் இருந்ததற்கு நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது.

ADVERTISEMENT

இதனிடையே 2022-ம் ஆண்டு அக்டோபரில் மீரா மிதுன் தாய் ஒரு புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமது மகள் டெல்லி தெருக்களில் சுற்றி வருகிறார்; அவரை மீட்க வேண்டும் என மீரா மிதுன் தாய் சியாமளா மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம், மீரா மிதுனை மீட்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று ஆகஸ்ட் 4-ந் தேதி நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லியில் சுற்றி திரிந்த மீரா மிதுன் கைது செய்யப்பட்டு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி கார்த்திகேயன், ஆகஸ்ட் 11-ந் தேதி மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

டெல்லியில் கைது செய்யப்பட்டு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள மீரா மிதுன், வரும் 11-ந் தேதி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share