கேரளாவில் பாரில் நடந்த சண்டையை தொடர்ந்து ஐ.டி ஊழியர் காரில் கடத்தி செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம்பவம் கேரள திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு ரகுவின் சொந்தம் ராசியா படத்தின் மூலம் அறிமுகமான லட்சுமி மேனன், தமிழில் சுந்தரபாண்டியன், கும்கி, குட்டி புலி, ஜிகர்தண்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் பாரில் தகராறில் ஈடுபட்ட சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பார் ஒன்றில் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து லட்சுமி மேனன் மற்றும் அவருடன் இருந்த 3 பேர் ஐடி ஊழியர் ஷா சலீம் என்பவரை காரில் கடத்தி சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஐடி ஊழியர் காவல்துறையில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து எர்ணாகுளம் வடக்கு போலீசார் லட்சுமி மேனன் உடன் இருந்த மிதுன், அனீஷ் மற்றும் ஒரு பெண் என 3 பேரை கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
விசாரணைக்கு நடிகை லட்சுமி மேனனை அழைத்த நிலையில் தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள லட்சுமி மேனனை காவல்துறையினர் தேடி வருவதாக தகவல்கள் வெயியாகி உள்ளது.
இந்த சூழலில் லட்சுமி மேனனுடன் இருந்த பெண் கொடுத்த புகாரில் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
