கீதா கைலாசம். தமிழ் திரையுலகில், இன்றைய தேதியில் வெற்றிகரமான குணசித்திர நடிகையாகத் திகழ்பவர். அம்மா, அண்ணி, அக்கா, பாட்டி என்று எந்த பாத்திரத்தை ஏற்று நடிக்கவும் தயாராக இருப்பவர். என்ன வேடத்தில் நடித்தாலும், அதனை உண்மைக்கு நெருக்கமாக உணர வைப்பவர். யதார்த்த வாழ்வில் நாம் பார்க்கிற ஒரு மனிதராக மட்டுமே திரையில் தென்படுவது, இவரது நடிப்பின் சிறப்புகளில் ஒன்று. actress geetha kailasam a powrhouse of multi talent
திருவாரூரில் பிறந்து வளர்ந்தவர் கீதா. இவரது தந்தை நாகராஜனும் இயக்குனர் கே.பாலசந்தரும் பால்ய கால நண்பர்கள். அந்த நட்பு பாலசந்தர் இயக்குனர் ஆனபின்னும் தொடர்ந்தது.
நாகராஜனோ சிறுகதை, நாவல் எழுதுவது என்றிருந்தார். அதனால், இயல்பாகவே கீதாவுக்குள்ளும் நடிப்பு, எழுத்து மீது ஆர்வம் இருந்தது.
பள்ளி, கல்லூரி படிப்புக்குப் பின்னர் சிஏ, ஐசிடபிள்யூஏ பயின்றார் கீதா. அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டபோது ஆசைகள் மனதின் அடியில் தங்கிக் கிடந்தன.
பிறகு பாலச்சந்தரின் மகன் கைலாசத்தோடு கீதாவுக்குத் திருமணம் ஆனது. சென்னைக்கு வந்தபிறகு, சார்ட்டட் அக்கவுண்டண்ட் தொடர்பான பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் கிடைத்தது.

பாலச்சந்தர் வீட்டில் தொடங்கிய கலை பயணம்!
அதன் தொடர்ச்சியாக, கணவர் நடத்தி வந்த ‘மின்பிம்பங்கள்’ நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைப் பார்க்கத் தொடங்கினார் கீதா. மெல்ல மெல்ல, அங்கு உருவாகும் படைப்புகளின் உள்ளடக்கத்திலும் நிர்வாகப் பணிகளிலும் பங்கேற்றார். ஒருகட்டத்தில் நடிகைகளின் ஆடை வடிவமைப்பு, காஸ்ட்டிங், காட்சிகளில் நடிப்பதற்கு ஏற்ப நடிகைகளை தயார்படுத்துவது என்று ‘ஆல்ரவுண்டர்’ராக செயல்படத் தொடங்கினார்.
தொண்ணூறுகளின் இறுதியில் ரசிகர்களை வசீகரித்த மர்மதேசம், ரமணி வெர்சஸ் ரமணி, வீட்டுக்கு வீடு லூட்டி, அண்ணி, சஹானா உள்ளிட்ட மின்பிம்பங்கள் தயாரிப்புகளில் கீதாவின் பங்களிப்பு உண்டு.
சிறு வயது முதலே கீதாவை பெரிய திரையில் நடிகையாகப் பார்க்க வேண்டுமென்ற ஆசை அவரது தந்தைக்கு இருந்திருக்கிறது. அதற்கேற்ற நடிப்பார்வமும் கீதாவிடம் இருந்திருக்கிறது.
ஆனால், ஒருபோதும் தன்னிடமிருந்த நடிப்பார்வத்தை கணவர் கைலாசத்திடமோ, இயக்குனர் பாலச்சந்தரிடமோ வெளிப்படுத்துவதற்கான சூழல் கீதாவுக்கு வாய்க்கவில்லை. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த பணிகள் அந்த சூழல் உருவாகவிடாமல் அவரது ஆர்வத்தைத் தள்ளிப் போட்டிருக்கின்றன.
அதேநேரத்தில், கிடைக்கும் சிறு இடைவெளியில், ஓய்வில் எழுத்து சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார் கீதா. அவரது எழுத்துகளைக் கண்ட பாலசந்தர், அதனை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்.
இப்படிப் பல ஆண்டுகள் கேமிராவுக்கு பின்னே நிதி, நிர்வாகம் முதல் ஒரு படைப்பு எப்படி உருவாகிறது என்பது வரை அனைத்தையும் கற்று அறிந்தவர் கீதா. ஆனால், திருமணத்திற்கு முன்னர் அப்படியொரு நிலையை அவர் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. அந்த கற்றலின் பயனே இன்று ஒரு வெற்றிகரமான நடிகையாக அவரை மாற்றியிருக்கிறது.
2014இல் கைலாசத்தின் திடீர் மறைவு கீதாவின் உலகை ஸ்தம்பிக்க வைத்தது. அந்த இழப்பின் தாக்கத்தில் இருந்து இயல்பு நிலைக்குத் திரும்ப, சில விஸ்வரூப கரங்கள் அவருக்குத் தேவைப்பட்டன. அப்படிப்பட்ட இழுசக்தியாக அவரது எழுத்துகள் அமைந்தன.
இருபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை அதன்பிறகு அவர் எழுதி அரங்கேற்றினார். தனது எழுத்துகளைப் பகிர்கிற ‘கதை சொல்லல்’ மேடைகளை உருவாக்கினார். அவை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்திய தாக்கம், சினிமாவில் முகம் காட்டுகிற வாய்ப்பினை கீதாவுக்குப் பெற்றுத் தந்தது.

அண்ணி, அம்மா, பாட்டி…
அப்படித்தான் கணேஷ்பாபுவின் இயக்கத்தில் ‘கட்டில் படத்தில் நடிக்க முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்டார். அது தயாரிப்பு நிலையில் இருந்து திரைக்கு வரும் முன்னரே ’சார்பட்டா பரம்பரை’, ‘வீட்ல விசேஷம்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘அனல் மேலே பனித்துளி’ போன்ற படங்களில் நடித்து முடித்து, அவை திரையை வந்தடைந்தன.
‘சார்பட்டா பரம்பரையில்’ ரங்கன் வாத்தியார் ஆக வரும் பசுபதியின் மனைவியாக நடித்ததைக் கண்ட ரசிகர்கள், ‘யார் இவர்’ என்று கேள்வி எழுப்பினர். ‘மாமன்னன்’ படத்தில் நாயகன் உதயநிதியின் தாயாக, வடிவேலுவின் மனைவியாக வந்து, நம் கண்களுக்கு நாம் இதுவரை காணாத உலகத்தின் பிரதிநிதியாகத் தெரிந்தார் கீதா. பிறகு லவ்வர், ஸ்டார், நீலநிற சூரியன், டியர், ராயன் போன்ற படங்களில் நடித்தார்.
’லப்பர் பந்து’ படத்தில் நாயகியின் பாட்டியாக கீதா தோன்றியது பல ரசிகர்களைக் கவர்ந்தது. அந்த படத்தில் நடிகர் தினேஷின் தாயாகத் தோன்றி அப்பாத்திரத்தோடு பாந்தமாகப் பொருந்தி நின்றார்.
அப்படம் தந்த பாராட்டுகளுக்கு இணையாக ‘ராயன், ‘அமரன்’ படங்களில் நடித்தார். நான்காண்டுகளுக்கு முன்னர் அவர் நடித்த ‘எமகாதகி’ படம் கூடச் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியானது. அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

நடிப்பில் முத்திரை பதிக்க வயது தடையல்ல!
கீதா கைலாசத்தின் தோற்றமும் குரலும் அவரது மிகப்பெரிய ப்ளஸ். இருபதாண்டுகளுக்கு முன்னர் அவர் திரையில் தோன்றியிருந்தால், அவை வெறுமனே ‘பெருமிதம்’ நிறைந்த இளம்பெண்ணாக, நடுத்தர வயதுப் பெண்மணியாக மட்டுமே காட்டியிருக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், வயதும் வாழ்வு தந்த அனுபவங்களும் அவர் ஏற்கும் பாத்திரங்களோடு பார்வையாளர்கள் நூறு சதவிகிதம் பொருந்தி நிற்கத் துணை நிற்கின்றன.
எப்போதும் போல, இப்போதும் நடிப்போடு சேர்த்து எழுத்து சார்ந்த பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார் கீதா. திரைப்படம் மற்றும் வெப்சீரிஸ் உருவாக்கத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.
மனதின் அடியாழத்தில் நாம் கொண்டிருக்கும் ஆர்வமும் உழைப்பும் எப்போது வேண்டுமானாலும் இலக்கு நோக்கிப் பயணிக்கும் வேட்கையைத் தூண்டிவிடும் என்பதற்கொரு உதாரணம் கீதா கைலாசம். இப்போதிருப்பதைப் போல, எதிர்காலத்திலும் தனது பங்களிப்பால் பல படைப்புகளை அவர் உயிரூட்டட்டும்!