விரைவில் வெளியாகவுள்ள கலன் படத்தில் அப்புகுட்டி, தீபா, யாசர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் யாசருக்கு தாய்மாமாவாக அப்புக்குட்டி நடித்துள்ளார். அப்புக்குட்டிக்கு அக்காவாக தீபா நடித்திருக்கிறார்.
‘கலன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி அக்டோபர் 19 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில், இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத், இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், செயலாளர் பேரரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகை தீபா சங்கர்,’ இதுபோன்ற படங்களில் ஆண்கள்தான் கதாநாயகனாக மாஸ் வசனமெல்லாம் பேசுவார்கள். ஆனால், இந்தப் படம் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. பெண்ணை பிரம்மதேவன் படைக்கும்போது, அனைத்து வாசனைத் திரவியங்களையும் பயன்படுத்திப் படைத்தாராம்.
ஆனால், அந்தப் படைப்பு முழுமையடையவில்லை என்பதால் பாம்புப் புற்றுக்குள் கைவிட்டாராம். உள்ளேயிருந்த பாம்பு, விஷத்தைக் கக்கியதாம். அதையும் வைத்துத்தான் பெண் என்ற பிரம்மாண்ட சக்தியைப் பிரம்மன் படைத்தாராம். ஒரு பெண் தாயாக , தங்கையாக ,அக்காவாக, மனைவியாக ஆண்களின் அருகில் சாந்த சொருபியாக இருப்பாள்.
ஆனால், எப்போது அதிகார வர்க்கம் பெண்களிடத்தில் அத்துமீறுகிறதோ அப்போதுதான் பெண் அந்த விஸ்வரூபத்தை எடுப்பாள். இந்தப் படத்தில் பெண்ணை அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் சாட்சியாக மாற்றியுள்ளார். அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன்.
கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகுதான் எனக்கு நல்ல நடிகையாக அங்கீகாரம் கிடைத்தது. நான் ஓவர் ஆக்டிங் செய்தாலும் அதை கண்டுகொள்ளாமல், நான் நன்றாக நடிக்கிறேன் என்றே பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். அவர்களின் ஆதரவால்தான் என் பயணம் சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது’ என்று பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
16 செல்வங்கள்… 16 குழந்தைகள் : நாடாளுமன்ற தொகுதிகள் குறைவதை சுட்டிக்காட்டி பேசிய ஸ்டாலின்
கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் மனைவி கையில் ரூ.26 லட்சம் மதிப்புள்ள கைப்பை!