செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரிக்க, விக்ரம் பிரபு ஜோடியாக நடிகை அனந்தா (Anantha) நடிக்க, இன்னொரு நாயகனாக லலித் குமாரின் மகன் LK. அக்ஷய் குமார் அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ள படம் சிறை. (அனுராதா ரமணன் எழுத்தில் லட்சுமி, ராஜேஷ் நடித்த ஒரு படத்தின் பெயரும் இதுதான்)
‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார்.
அண்மையில் வெளியான டிரெய்லரில், காவல் அதிகாரியான விக்ரம் பிரபு, ஒரு இளம் குற்றவாளியை அழைத்துச் செல்வதும், அவரிடமிருந்து குற்றவாளி தப்பித்துவிட அதைத் தொடர்ந்த பரபரப்பான சம்பவங்களும், இடையில் ஒரு இளம் ஜோடியின் காதலும் வருகிறது.
வரும் டிசம்பர் 25-ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினார் நாயகன் விக்ரம் பிரபு.
சிறை, விக்ரம் பிரபுவின் இருபத்தைந்தாவது படம் என்பதால் இந்த சிறப்பு சந்திப்பு.
“2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி படத்தில் துவங்கி பதிமூன்று வருடங்கள் முடிந்த நிலையில் இருபத்தைந்து படங்கள் முடித்துள்ளீர்கள். அடுத்த இருபத்தைந்து படங்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற திட்டம் ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டேன்.
“என் வாழ்வில் எதுவுமே எதிர்பாராததுதான் சார். நடிகனாவேன் என்று நான் நினைக்கவில்லை. அதுவே எதிர்பாராத ஒன்று. இன்று நாம் இப்படி பேசுவோம் என்று நான் நினைத்ததே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இனியும் அப்படித்தான். இருபத்தைந்து படங்களை முடிப்பது என்பதற்கான காலகட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என்னை விட சீக்கிரம் அப்பா முடித்து இருப்பார். அப்பாவை விட தாத்தா (நடிகர் திலகம் சிவாஜி கணேசன்) முடித்து இருப்பார்.
எனது அடுத்த இருபத்தைந்து படங்கள் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. அதன் வழியே போக வேண்டியதுதான். ஆனால் இந்த இருபத்தைந்து படங்கள் கொடுத்த அனுபவத்தின்படி, கதைத் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். எனக்கு கதை, படிப்பதை விட கேட்பதுதான் பிடிக்கும் ” என்றார்.
“உங்களுக்கு பிடித்த ஜானர் எது?” என்றேன்.
‘எனக்குப் பிடித்த ஜானர் சினிமா. அவ்வளவுதான். நல்ல கதை எது என்றாலும் எனக்கு அந்த ஜானர் பிடிக்கும்.
போலீசாக அதிகம் நடித்து இருக்கிறேன். அதை மாற்றி விதவிதமான கதைகளில் நடிக்க வேண்டும். அதே நேரம் கதை நன்றாக இருந்தால் போலீசாக இனிமேலும் நடிக்கவும் தயார்” என்றார்.
“கள்வனின் காதலி, கைராசிக்காரன், சிறை மூன்றையும் எப்படிப் பார்க்கிறீர்கள். எது ரொம்ப பிடிக்கும்?” என்றேன்.
“முதல் இரண்டு படங்கள் என்னே என்றே தெரியவில்லையே”
“உங்கள் தாத்தா சிவாஜி கணேசனின் இருபத்தைந்தாவது படம் கள்வனின் காதலி உங்கள் அப்பா பிரபுவின் இருபத்தைந்தாவது படம் கைராசிக்காரன், உங்கள் இருபத்தைந்தாவது படம் இந்த சிறை.” என்றேன்.
“ஓ.. அருமை. அவர்களைக் கேட்டால் ஒரே வார்த்தையில்”அது என் படம்; இது உன் படம்’ என்று சொல்லி விட்டுப் போய் விடுவார்கள். உங்களுக்கும் அதுதான் பதில்.
நான் நடிகன் ஆவேன் என்று தாத்தா நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டார்.
நான் அமெரிக்காவில் படித்துக் கொண்டு இருந்தபோது, ஒரு முறை தாத்தா பேசியது நினைவுக்கு வருகிறது “ARE YOU STILL AN INDIAN? OR BECAME A BLOODY AMERICAN? ” என்று கேட்டார். நான் வரும்போது நீங்களே பார்ப்பீங்க” என்று பதில் சொன்னேன். இந்தியனாகவே வந்தேன் “என்றார்.
அன்னை இல்லத்தையும் பாரத விலாஸ் ஆகவே வைத்திருந்திருக்கிறார் நடிகர் திலகம்.
— ராஜ திருமகன்
