கரூரில் தமது பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரில் தற்போதைய தகவலின்படி 30 பேரின் குடும்பத்தினரை சென்னையை அடுத்த மாமல்லபுரம் நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்து நாளை (அக்டோபர் 27) சந்தித்து ஆறுதல் கூறுகிறார் நடிகர் விஜய்.
கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடிகர் விஜய் பிரசாரம் செய்த போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த துயர சம்பவம் நிகழ்ந்த போதே கரூரை விட்டு நடிகர் விஜய், சென்னை திரும்பியது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும் ஒரு மாதமான நிலையிலும் கரூருக்கு சென்று விஜய் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்காததும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரில் 30 பேரின் குடும்பத்தினரை சென்னையை அடுத்த மாமல்லபுரம் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்து நாளை (அக்டோபர் 27) நடிகர் விஜய் சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். இதற்காக கரூரில் இருந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆம்னி பேருந்துகளில் அழைத்துவரப்படுகின்றனர்.
எஞ்சிய 11 பேரின் குடும்பத்தினரும், “நடிகர் விஜய்யை சந்திக்க வர முடியாது.. அவரை சந்தித்து என்ன செய்யப் போகிறோம்? ” என மாமல்லபுரம் வர மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல் வரவழைத்து விஜய் ஆறுதல் கூறுவதும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
