எஸ்.ஏ.சி.-விஜய்; இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு
வேந்தன்
தன் தந்தையைப் பற்றி விஜய் என்ன நினைக்கிறார்? இந்த கேள்வி அவரது ரசிகர்கள் முதல், ரசிகர் மன்ற நிர்வாகிகள் வரை பலருக்கும் ஒரு புதிராகத்தான் இருக்கிறது.
விஜய் ரசிகர்கள் என்னும் உதிரிப்பூக்களை மாலையாகத் தொடுத்தவர் எஸ்.ஏ.சி. பல்வேறு பாத்திரங்களைப் படைத்து அதைத் தொகுத்து படமாக உருவாக்குபவர் அல்லவா? அதே மாதிரி விஜய்க்கான ரசிகர் மன்றங்களை உருவாக்கி ஒரு கட்டத்தில் அதை விஜய் மக்கள் இயக்கம் என்ற மாபெரும் மக்கள் சமுத்திரமாக கட்டமைத்தவரும் அவரே…
தனிப்பட்ட சந்திப்புகளில் மட்டுமல்ல, விஜய் கலந்துகொள்ளும் மாபெரும் விழாக்களிலும் மக்கள் மன்ற நிர்வாகிகள் எஸ்.ஏ.சி.யை அப்பா என்றே அன்போடு அழைப்பார்கள். விஜய் கலந்துகொள்ளும் விழாக்களில் விஜய்க்கு கிடைக்கும் முக்கியத்துவத்தை விட அவரது அப்பாவுக்கு மரியாதையும் முக்கியத்துவமும் அபரிமிதமாகக் கிடைக்கும்.
சுற்றிலும் சீருடை பாதுகாப்பாளர்கள் படை திரள, ஒல்லியாய் உறுதியாய் விஜய்யின் அப்பா வரும்போது விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் எல்லாம், பவ்யமாய், பணிவாய், பாந்தமாய், மென்மையாய் அவ்வளவு இறங்கி வந்து அழைத்துச் செல்வார்கள் மேடைக்கு.
விஜய்யை உருவாக்கியவர், விஜய் மன்றத்தை உருவாக்கியவர் என்பது மட்டுமல்ல…. விஜய்க்கும், அவரது ரசிகர்களுக்கும் இடையே இருக்கும் உணர்வுப் பாலத்தைக் கட்டிய இன்ஜினியர் அவர்தான். பாலம் எங்கே எப்போது கட்டப்படவேண்டும், பாலத்தின் பில்லர்கள் எத்தனை அடி உயரம் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிப்பவர் அந்த இன் ஜினியர்தான். அதுமட்டுமல்ல…பாலத்தில் மேல் பாகமோ கீழ் பாகமோ சிறு விரிசல் ஏற்பட்டால் கூட, இந்த இன்ஜினியருக்கு மூக்குவேர்க்கும். உடனே அதை சரி செய்வார்.
இப்படிப்பட்ட எஸ்.ஏ.சி.யை பற்றி விஜய் பொது மேடைகளில் அவ்வளவு எளிதாக பேச மாட்டார். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டுக் கொட்டிவிடுவார்.
அப்படி ஒரு மேடை…2011 ஆம் ஆண்டு சேலத்தில் அமைந்தது. பிரமாண்டமாக நடந்த அந்த நலத்திட்ட விழா, விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து, அந்தத் தேர்தலில் அதிமுக வென்ற பிறகு நடந்தது.
சேலம் மாவட்ட விஜய் இயக்கத் தலைவரான தமிழன் பார்த்திபனுக்கு தங்க செயின் போட்ட அந்த மேடையில் தனது அப்பாவை வைத்துக் கொண்டு அத்திப் பூபோல அப்பாவைப் பற்றிப் பேசினார் விஜய்.
“எங்க அப்பா…ராமநாதபுரம் தாண்டி தனுஷ்கோடிங்குர ஊர்ல ஒரு ஸ்கூல் டீச்சரோட பையன். அவர் சக்திக்கு அவரும் ஒரு டீச்சர். ஹெட் மாஸ்டர்னு ஆகியிருக்கலாம். ஆனா அன்னிக்கு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு சினிமாதான் வேணும்னு சென்னைக்குப் போனாரு. வெறி பிடிச்சு உழைச்சாரு. அதனாலதான் இன்னிக்கு தமிழ் சினிமா, இந்தி சினிமாவுல நாடறிஞ்ச இயக்குனரா இருக்காரு. பவித்ரன், ஷங்கர், ராஜேஷ்னு பல இயக்குனர்களை உருவாக்கிய இயக்குனரா இருக்காரு.
என்னை உருவாக்கினது அவர்தான். சினிமாவுல எனக்குப் புள்ளிவச்சவர் அவர்தான். அந்த புள்ளிய நான் ரசிகர்கள் ஆதரவோட கோலம் ஆக்கிவிட்டேன்” என்று தனக்கும் தன் தந்தைக்குமான சினிமா உறவைப் பற்றி வரையறுத்த விஜய்….போகிற போக்கில் ஒரு முக்கியமான உண்மையை அந்த மேடையில் சொன்னார்.
“என்ன… அவரு எதுக்கெடுத்தாலும் தாட்பூட்னு சத்தம் போடுவாரு. நாம அமைதியா நம்ம வேலையைக் காட்டிடுவோம்” என்பதுதான் அது.
2011 இல் விஜய் சொன்னது அவரது அப்பாவுக்கான எச்சரிக்கையா, சுட்டிக்காட்டலா, அறிவுறுத்தலா என்றெல்லாம் வகைப்படுத்தப்படலாம்.
ஆனால்…தாட்பூட் என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்த எஸ்.ஏ.சி.யிடம் தானும் தாட்பூட் என்று சத்தம் போட்டுக் கொண்டிருக்காமல் அமைதியாக காய்களை நகர்த்தத் தொடங்கினார் விஜய்.
அதன் விளைவாகத்தான் விஜய் மக்கள் இயக்கத்தில் மாற்றம் தெரியத் தொடங்கியது.
என்ன மாற்றம்?
(நாளை தொடரும்)![]()
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 1]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 2]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 3]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 4]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 5]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 6]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 7]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 8]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 9]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 10]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 11]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 12]
[ இன்றைய வழக்கு நாளைய தீர்ப்பு மினி தொடர் 13]
