சினிமாவில் அறிமுகமாகும் செந்தில் மகன்!

Published On:

| By admin

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் தொடர்ச்சியாக அறிமுகமாகி வருகின்றனர்.
நடன இயக்குநரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
ஆக்‌ஷன் மற்றும் காமெடி படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஜூன் 25 அன்று சென்னையில் தொடங்கியது. பூஜையில் ராகவா லாரன்ஸ், அவரது தம்பி எல்வின், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
அதே போன்று தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ள பிரபல காமெடி நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு தற்போது சினிமாவில் நடிகராக அறிமுகமாகி உள்ளார்.
அறிமுக இயக்குநர் என்.ஏ.ராகேஷ் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடித்து வரும் படம் ‘தடை உடை’. இந்தப் படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக மிஷா நராங் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஆதிப் இசையமைக்கிறார். தற்போது இந்தப் படத்தில் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு நடிகராக இணைந்துள்ளார். பாபி சிம்ஹா அவரை வரவேற்று சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

**-இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share