நாட்டில் வலுவான எதிர்க்கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்திருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி இன்று மாலை 7.15 மணிக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 8000 பேர் வரை கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வரும் நிலையில் வெளிநாட்டு தலைவர்களும் டெல்லி வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜூன் 9)காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்பது மிகப்பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வலுவான எதிர்க்கட்சியை தேர்ந்தெடுத்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது. சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கும் அழைப்பு வந்துள்ளது. அங்கு செல்வது குறித்து பிறகு தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.
அப்போது திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது,. விசிக, நாம் தமிழர் கட்சிகள் மாநில அந்தஸ்தை பெற்றுள்ளன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறிவிட்டு சென்றார்.